இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2019 உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இருப்பினும் ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் விளையாடி வருவது அவரின் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
MS Dhoni (Photo Credits : BCCI/IPL) |
கடந்த சில வருடங்களாகவே பார்ம் இல்லாமல் தவித்து வரும் அவர் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார், இருப்பினும் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப் ஆகியவற்றில் இன்னும் சோடை போகாமல் ஜொலித்து வருகிறார்.
ஜொலித்த சென்னை:
குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த அவர் தலைமையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது இருப்பினும் ஏறக்குறைய அதே வீரர்களை வைத்துக் கொண்டு அதற்கு அடுத்த ஐபிஎல் 2021 சீசனிலேயே 4வது முறையாக கோப்பையை வென்று கேப்டனாக சாதித்து கட்டினார்.
இருந்தாலும் தற்போது 40 வயதை அவர் கடந்து விட்டதால் விரைவில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது, கடந்த வருடமே அவர் ஓய்வு பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஐபிஎல் 2022 சீசனில் கண்டிப்பாக விளையாட உள்ளதாக அவரே தெரிவித்து சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஐபிஎல் 2022இல் தோனி:
இந்த வேளையில் சமீபத்தில் சென்னையில் 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் "தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு அடுத்து தனது 2வது வீடாக விளங்கும் சென்னை மண்ணில் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னிலையில் மட்டுமே தனது வாழ்நாளின் கடைசி கிரிக்கெட் போட்டி நடைபெறும்" என தோனி வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
அதேபோல் ஐபிஎல் 2022 சீசனுக்காக நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் முதல் வீரராக எம்எஸ் தோனி உள்ளார், அத்துடன் ஐபிஎல் 2022 தொடர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று நடப்பு சாம்பியனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதியிலேயே ஓய்வு:
இந்த நிலையில் ஐபிஎல் 2022 சீசன் முழுவதுமாக எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம் தான் என நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டௌல் கணித்துள்ளார். இது பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,
தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாட தோனி முடிவெடுத்துள்ளதால் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் கேப்டன் பொறுப்பை பப் டு பிளேஸிஸ் ஏற்பார் என நான் கருதுகிறேன், அடுத்த சீசன் முழுவதுமாக தோனி விளையாடுவார் என எனக்கு தோன்றவில்லை. மேலும் சொந்த மண்ணில் சென்னை விளையாடும்போது எம்எஸ் தோனியின் ஓய்வு மற்றும் பப் டு பிளேஸிஸ் கேப்டனாக பொறுப்பேற்பது பற்றி அறிவிப்புகள் வெளியாகும்.
என ஐபிஎல் 2022 சீசன் முழுவதுமாக தோனி விளையாடாமல் பாதியிலேயே ஓய்வு பெறுவார் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக டு பிளேஸிஸ் பொறுப்பேற்பார் என சைமன் டௌல் தெரிவித்தார்.
- சென்னையின் முக்கிய வீரராக வலம் வரும் டு பிளசிஸ் ஏற்கனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.
4 வீரர்கள்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கப் போகும் 4 வீரர்கள் பற்றிய கேள்விக்கு அவர்,
ரவீந்திர ஜடேஜா சென்னையின் முக்கியமான வீரர் என்பதால் அவரை தக்க வைக்க வேண்டும், அதேபோல் கடந்த சீசனில் ருத்ராஜ் கைக்வாட் விளையாடிய விதத்தால் அவரையும் தக்க வைக்க வேண்டும் ஏனெனில் டாப் ஆர்டரில் டு பிளேஸிஸ் உடன் அவரை விளையாட வைக்காமல் வேறு எங்கும் விடக்கூடாது.
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தக்கவைக்க படுவார்கள். இதில் ருதுராஜ் சென்னையின் வருங்கால கேப்டனாக கூட ஆகலாம், மறுபுறம் டு பிளேஸிஸ்க்கு 37 வயது ஆகிறது என்பதால் சாம் கரன் அல்லது மொயீன் அலி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை 4-வது வீரராக தக்க வைக்க வேண்டும் ஏனென்றால் ஒரு நல்ல ஆல்ரவுண்டரை வெளியே விடக்கூடாது
என கூறினார். சைமன் டௌல் தெரிவித்த இந்த 4 வீரர்கள் தான் ஏலத்துக்கு முன்பாக சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன, அப்படியானால் பப் டு பிளேஸிசை மெகா ஏலத்தில் விட்டு மற்ற அணிகளை எடுக்க விடாமல் அதிக விலைக்கு வாங்கி சென்னை அணி நிர்வாகம் தற்காலிகமாக கேப்டன் பொறுப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மகாராஷ்டிரா அணிக்காக கேப்டன்ஷிப் செய்துவரும் ருத்ராஜ் கைக்வாட் தோனிக்கு பின்னர் அதிக வருடங்கள் கேப்டன்ஷிப் செய்யும் வீரராக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.