நியூஸிலாந்துக்கு எதிராக நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரில் துவங்கி நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்துள்ளது.
Shreyas Iyer Hits Century On Debut |
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார், மறுபுறம் சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்தார் ஆனால் அனுபவம் நிறைந்த புஜாரா 26 ரன்களிலும் ரகானே 35 ரன்களும் எடுத்து நடையை கட்டினார்கள்.
சதம் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர்:
இதனால் 145/4 என தடுமாறிய இந்தியாவை அறிமுகப் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சக வீரர் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து சரிவிலிருந்து மீட்டார், தனது முதல் போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடிய அவர் 171 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 105 ரன்கள் எடுத்தார்.
- இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
- மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்கும் 10வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இவருடன் ஜடேஜா 50 ரன்கள் எடுக்க இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சோதனையிலும் 2019 சாதனை:
இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரராக விளங்கும் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார், அந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு வரை அழைத்துச் சென்ற அவர் 2020 சீசனில் டெல்லியை இறுதி போட்டி வரை அழைத்து சென்று அசத்தினார்.
இருப்பினும் 2021 சீசன் துவங்குவதற்கு முன்பாக காயம் அடைந்த காரணத்தால் அவருக்குப் பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக டெல்லி அணி நிர்வாகம் நியமித்தது ஆனால் கடந்த மாதம் துபாயில் நடந்த 2021 ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் காயத்திலிருந்து குணமடைந்தது அணிக்கு திரும்பிய போதிலும் ஷ்ரேயஸ்க்கு மீண்டும் கேப்டன்சிப் பதவி வழங்கப்படவில்லை.
- இது மட்டுமல்லாமல் 2017இல் அறிமுகமாக களம் இறங்கிய பின் இந்தியாவிற்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்படி காயத்தால் சோதனைக்கு உள்ளான போதிலும் இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனையும் படைத்துள்ளார்.
வாட்சப் கனவு:
இந்த நிலையில் கான்பூரில் சதம் விளாசியதன் வாயிலாக தனது தந்தையின் 4 வருட கனவை நிறைவேற்றி பெருமை அடைய செய்து உள்ளார், அது என்னவெனில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது, அப்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த ஷ்ரேயஸ் அய்யருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் அந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்ற பின்னர் பார்டர் - கவாஸ்கர் வெற்றி கோப்பையுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அன்று முதல் கிரிக்கெட்டின் உயிர்த்துடிப்பான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக ஸ்ரேயாஸ் அய்யர் விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டும் குறிக்கோளுடன் அந்த புகைப்படத்தை அவரின் தந்தையான சந்தோஷ் தனது "வாட்ஸ்அப் டிபி" யாக 2017 முதல் தற்போது வரை வைத்திருப்பதாக கான்பூர் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் இந்தியாவின் 303வது டெஸ்ட் கிரிக்கெட் வீரராக களமிறங்கிய போது இது பற்றி அவரின் தந்தை தெரிவித்தார்.
- தற்போது கான்பூர் டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்ததன் வாயிலாக தனது தந்தையின் 4 வருட கனவை நிஜமாக்கி தந்தை பெருமைப்படும் தணையனாக ஸ்ரேயாஸ் அய்யர் சாதித்துக் காட்டியுள்ளார்.