இந்திய அணியின் கேப்டனாக கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருடன் அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக புதிய டி20 கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Photo Credits : Getty Images |
கேப்டன்ஷிப் பயணம்:
கேப்டனாக பொறுப்பேற்றது முதல் விராட் கோலி தலைமையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் கடந்த 5 வருடங்களில் பல்வேறு வகையான மைல்கல் வெற்றிகளை தொட்டது, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் 2 தொடர் வெற்றிகள் சமீபத்தில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
இருப்பினும் அவர் தலைமையில் 2017, 2019, 2021 ஆகிய 3 வருடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற 4 ஐசிசி உலக கோப்பைகளில் இந்தியா ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் போனது, அத்துடன் ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்து வந்த பெங்களூர் அணிக்காக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாத இவர் எப்படி இந்தியாவிற்காக ஒரு உலக கோப்பையை வென்று கொடுக்கப் போகிறார் என தொடர்ந்து விமர்சனங்களுக்கும் உட்பட்டு வந்தார்.
அந்த விமர்சனங்களை காதில் வாங்கி வைத்துக் கொண்டு வந்த விராட் கோலி இந்தியா மற்றும் ஐபிஎல் என ஒட்டுமொத்த டி20 கேப்டன்ஷிப் பதவியையும் தற்போது அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளார்.
- தற்போதைய நிலைமையில் டி20 உலகக் கோப்பையிலும் அவர் தலைமையில் தோல்வியுற்றதால் அவரின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.
மொத்தமா முழுக்கு போடுங்க:
இந்நிலையில் டி20 மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக வேண்டுமென பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இதுபற்றி சாமா தொலைக்காட்சியில் அவர்,
அனேகமாக விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சக்தியாக உள்ளார் ஆனால் என்னை பொறுத்தவரை அவர் ஒட்டுமொத்த கேப்டன்ஷிப் பதவியையும் தற்போதே ராஜினாமா செய்ய முடிவெடுத்தால் அது இன்னும் நன்றாக இருக்கும். கேப்டன்ஷிப்பை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டால் அதன்பின்னர் எந்தவித அழுத்தமும் இல்லாமல் அவரால் எளிதாக விளையாட முடியும்.
என கூறினார். மேலும் இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோகித் சர்மாவின் நியமனம் பற்றி அவர்,
ரோஹித் உடன் நான் ஒரு வருடம் விளையாடி உள்ளேன், அவர் ஒரு டாப் மனநிலையைக் கொண்ட அற்புதமான வீரர். பொறுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பொறுமையாகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆக்ரோஷமாகவும் இருப்பதே அவரின் மிகப்பெரிய பலமாகும், அவர் சிறப்பாக ஷாட்களை தேர்வு செய்யக்கூடிய டாப் வீரர் மற்றும் அணி வீரர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள கூடிய மன நிலைமையை கொண்ட சிறப்பானவர்
என தெரிவித்த சாகித் அப்ரிடி இந்திய கிரிக்கெட்டில் தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை வரவேற்றார்.
.கடந்த 2008இல் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது அடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ரோகித் சர்மாவுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த சாகித் அப்ரிடி விளையாடியிருந்தார்.
பணிச்சுமை:
விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதற்கு ஐசிசி உலககோப்பை அல்லது ஐபிஎல் கோப்பை என்பதையும் தாண்டி பணிச்சுமையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்திருந்தார், தொடர்ந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்வதால் பேட்டிங்கில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் ரன் மெஷினாக விளங்கிவரும் அவரால் கடந்த 2019க்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை, இருப்பினும் அதற்காக சாகித் அப்ரிடி கூறுவதுபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை என இந்திய ரசிகர்கள் கூறுகிறார்கள்.