2021 முழுக்க கிடைத்த தொடர் தோல்விகளை டி20 சாம்பியன் பட்டமாக மாற்றிய ஆஸ்திரேலியாவின் வெற்றி ரகசியம்

துபாயில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது, கடந்த அக்டோபர் 17 முதல் துவங்கிய இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் அரையிறுதி சுற்றில் கலக்கிய நியூசிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

Photo : Getty Images


ஆஸ்திரேலியா சாம்பியன்:

இதை தொடர்ந்து துபாயில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மோதின, இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 172/4 ரன்கள் எடுத்தது, அதிக பட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின் 173 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு டேவிட் வார்னர் 53 ரன்களும் மிட்செல மார்ஷ் 77* ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற செய்தனர், இதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சரித்திரம் படைத்தது.

கணிப்பு:

இந்த உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்னர் இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற அணிகளே இந்த வருடத்தின் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கணித்தார்கள்.

  • அணியில் இருக்கும் சில ஓட்டைகள், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் போன்ற சில முக்கிய வீரர்களின் மோசமான பார்ம் போன்ற பல காரணங்களால் இந்த உலகக் கோப்பையை வெல்லும் ஒரு அணியாக ஆஸ்திரேலியாவை பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருதவில்லை என்றே கூறலாம்.

இது மட்டுமல்லாமல் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியா பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வந்தது. அவையாவன:

1. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 - 1 என தோற்றது.

2. பின் கடந்த நவம்பர் 2020இல் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை சொந் த ரசிகர்களுக்கு முன்னிலையில் 2 - 1 என பரிதாபமாக இழந்தது.

3. அதை தொடர்ந்து பிப்ரவரி 2021இல் தனது அண்டை நாடான நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. அதிலும் 3 - 2 என்ற கணக்கில் தொடரை போராடி தோற்றது.

4. அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 4 - 1 என படுமோசமாக தோற்றது.

5. இறுதியில் டி20 உலககோப்பைக்கு தயராகும் வண்ணம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது ஆனால் வங்கதேசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது.

  • ஏனெனில் கிரிக்கெட்டின் அரசனாக கருதப்படும் ஆஸ்திரேலியா கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் 4 - 1 என கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்து சரித்திர தோல்வியை பார்த்தது.

இப்படி இந்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக பல்வேறு நாடுகளுக்கு எதிராக களமிறங்கிய 5 வெவ்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியா வரிசையாக தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்தது.

இதனால் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு இல்லை என கணித்த பலரின் கணிப்பையும் பொய்யாக்கிய ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

மொத்தத்தில் தொடர் தோல்விகள் தான் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கான ரகசியம் என்று கூறலாம்.

கை கொடுத்த நட்சத்திரங்கள் :

டேவிட் வார்னர்: சமீபத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் ஃபார்ம் இல்லாததால் ஹைதராபாத் அணி நிர்வாகம் கழட்டிவிட்ட டேவிட் வார்னர் இந்த உலக கோப்பையில் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்காக ஃபார்முக்கு திரும்பி கைகொடுத்தார்.

  • குறிப்பாக இறுதிப்போட்டியில் முக்கியமான 53 ரன்கள் குவித்து அசத்தினார், இதன் காரணமாக இந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் அவர தட்டிச் சென்றார்.
ஜோஸ் ஹேசல்வுட் : பந்துவீச்சில் பலரும் பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் கலக்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் அசத்திய ஜோஷ் ஹேசில்வுட் அதே பார்மை ஆஸ்திரேலியாவுக்கும் வெளிக்காட்டி கோப்பையை வெல்ல உதவினார்.

  • நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்சேல் மார்ஷ்: உலககோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா தோற்ற  தொடர்களிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக விளங்கிய மிச்செல் மார்ஸ் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி கோப்பையை வெல்ல உதவினார்.

அதேபோல அரையிறுதியில் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு இறுதி வாய்ப்பை உறுதி செய்த மேத்தியூ வேட், சுழல் பந்து வீச்சாளர், ஆடம் ஜாம்பா, முக்கிய நேரங்களில் கை கொடுத்த கிளன் மேக்ஸ்வெல் என பல வீரர்களின் பங்களிப்பால் ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டு உள்ளது. 

Previous Post Next Post

Your Reaction