இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Photo : Getty Images |
இந்திய ரசிகர்கள் முதல் வீரர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு மனிதராக இருக்கும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விடைபெறும் ரவி சாஸ்திரி :
தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிகாலம் தற்போது துபாயில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருடன் முடிவுக்கு வருகிறது, கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவி 2019ஆம் ஆண்டு மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.
பணி காலம், சம்பளம்:
இதை அடுத்து 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் தொடரிலிருந்து ராகுல் ட்ராவிட் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.
இவர் அடுத்த 2 வருடங்களுக்கு அதாவது அடுத்த 2023இல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை இந்தியாவின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார், இந்த 2 வருட பணிக்கு அவருக்கு சம்பளமாக ரூபாய் 10 கோடிகள் வழங்கப்பட உள்ளது.
சரி கிரிக்கெட்டிலுருந்து ஓய்வு பெற்றது முதல் தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்று அதுவரை இடைப்பட்ட காலங்களில் அவர் கடந்து வந்த பாதைகளையும் சாதனைகளையும் பார்ப்போம்:
1. கிரிக்கெட்டில் ஓய்வு - 2012 :
இந்தியாவிற்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 2 வகையான கிரிக்கெட்டிலும் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு மகத்தான கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
2. இளமையின் நீரூற்று (2016 - 2019):
அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் விளையாடிய அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். இவரைப் போன்ற ஒரு ஜாம்பவானை இந்திய கிரிக்கெட்டில் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்த பிசிசிஐ கடந்த 2016 ஆம் ஆண்டு அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளராக நியமித்தது.
- அவர் நியமிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்தியா தகுதி பெற்று அசத்தியது.
ராகுல் டிராவிட் மேற்பார்வையில் முதல் வருடத்தில் நூலிழையில் கோட்டை விட்டாலும் அடுத்த முயற்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரித்வி ஷா தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
3. ஆலமரத்தின் வேர் (2019 முதல் 2021 வரை) :
தொடர்ந்து பல தரமான இளம் இந்திய வீரர்களை தனது ஆலோசனைகளால் தூசி தட்டி பளபளப்பாக்கிய ராகுல் டிராவிட்டை கடந்த 2019ம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் இயக்குனராக பிசிசிஐ நியமித்தது, இந்திய சீனியர் அணியில் ஒருவர் காயம் அடைந்தால் நேராக அங்கு சென்றுதான் குணமடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்புவார்கள்.
மேலும் பல இளம் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தேசிய கிரிக்கெட் அகடமியில் ராகுல் டிராவிட் பல வகைகளில் உதவினார், இதன் பயனாக சீனியர் வீரர்கள் இல்லாமல் போனாலும் கூட இளம் வீரர்களை வைத்து இந்தியா வெற்றிகளை பெறத் துவங்கியது.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டி முதல் விராட் கோலி, முகமது சமி என பல நட்சத்திர முக்கியமான வீரர்கள் ஒவ்வொரு போட்டி முடியும்போதும் ஒவ்வொருவராக வரிசையாக காயம் மற்றும் பல்வேறு காரணமாக விலகினார்கள்.
- இருப்பினும் அதற்கு எல்லாம் வளைந்து கொடுக்காத இந்தியா 36 ரன்களுக்கு முதல் போட்டியில் ஆல் அவுட் ஆன போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து காபாவில் நடைபெற்ற 4வது போட்டியில் 32 ஆண்டுகள் கழித்து வாஷிங்டன் சுந்தர், தாக்கூர், நடராஜன் போன்ற அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக் கொண்டு சரித்திர வெற்றியை பதிவு செய்து தொடரை வென்று சாதனை படைத்தது.
- மேலும் சமீபத்தில் இங்கிலாந்தில் இந்திய சீனியர் அணியினர் டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டிருக்க இலங்கையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்கி வெற்றியும் பெற்றத, அதாவது ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு இந்திய அணிகள் 2 வெவ்வேறு நாடுகளில் விளையாடின.
இப்படி கடந்த 7 - 8 வருடங்களில் இந்திய கிரிக்கெட் ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு ராகுல் டிராவிட் வேரில் தண்ணி ஊற்றி வளர்த்தார் என்றே கூறலாம்.
2021இல் பயிற்சியாளர் :
விரைவில் இந்தியாவின் வெள்ளை பந்து அணிக்கு ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, டெஸ்ட் அணிக்கு விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளார்.
2021இல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் மேற்பார்வையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் இனி இந்தியா புதியதொரு சரித்திரம் படைக்கும் குறிப்பாக உலக கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் மனதார நம்பலாம்.