துபாயில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடர் நவம்பர் 14 வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் முதலில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
Photo : Getty Images |
அரைஇறுதி சுற்று:
பின்னர் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து டி20 உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம் இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தோல்வி அடையாமல் வலுவான அணியாக விளங்கிய பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்த அணி என்ற பெருமையுடன் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
மாபெரும் பைனல் :
இதை தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது, இந்த வெற்றியின் வாயிலாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா வரலாறு படைத்துள்ளது.
சரி கிட்டதட்ட ஒரு மாதமாக நடைபெற்ற இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள், பவுண்டரிகள், சிக்சர்கள், விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த வீரர்கள் பற்றி பார்ப்போம்:
அதிக ரன்கள் :
இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும்
- இவர் இந்த உலக கோப்பையில் பங்கேற்ற 6 போட்டிகளில் 60.60 என்ற அபாரமான சராசரியில் 303 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.
2வது இடம் : டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 289 ரன்கள்.
3வது இடம் : முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 281 ரன்கள்.
அதிகபட்ச ஸ்கோர் :
இந்த உலக கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் 67 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 101* ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் இந்த உலக கோப்பையின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
- அதேபோல இந்த உலக கோப்பையில் சதம் அடித்த ஒரே வீரரும் ஜோஸ் பட்லர் ஆவார்.
அதிக அரை சதங்கள்:
இந்த உலக கோப்பையில் அதிக அரை சதங்கள் அடித்த பேட்டராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 4 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இந்தியாவின் கே எல் ராகுல், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இலங்கையின் நிசாங்கா ஆகியோர் தலா 3 அரை சதங்களுடன் உள்ளனர்.
அதிக பவுண்டரிகள்:
அதேபோல் இந்த உலக கோப்பையில் அதிக பவுண்டரிகளை விளாசி ரன் மழை பொழிந்த பேட்டராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 32 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
- 2வது இடம் : பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 28 பவுண்டரிகள்.
- 3வது இடம் : அசலங்கா (இலங்கை) மற்றும் முஹம்மது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 23 பவுண்டரிகள்.
அதிக சிக்சர்கள் :
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற இந்த உலக கோப்பைகளில் அதிக சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து பேட்ஸ்மேனாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 6 போட்டிகளில் 13 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் : முஹம்மது ரிஸ்வான் - 12 சிக்சார்கள்.
- 3வது இடம் : டேவிட் வீஸ் (நமீபியா) - 11 சிக்சர்கள்.
அதிக விக்கெட்கள் :
இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த பவுலராக இலங்கை அணியை சேர்ந்த இளம் வீரர் வணிந்து ஹசரங்கா 16 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
- இவர் இந்த உலக கோப்பையில் பங்கேற்ற 8 போட்டிகளில் 16 விக்கெட்களை 5.20 என்ற அபாரமான எக்கனாமியில் வீழ்த்தி சாதித்துள்ளார்.
2வது இடம் : ஆடம் சாம்பா (ஆஸ்திரேலியா) & ட்ரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து) - 13 விக்கெட்கள்.
3வது இடம் : சாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) & ஜோஸ் ஹேசல்வுட் (ஆஸ்திரேலியா) - 11 விக்கெட்கள்.
சிறந்த பவுலிங் & 5 விக்கெட் ஹால்:
இந்த உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா இந்த உலக கோப்பையின் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் ஆவார்.
- 2வது இடத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரகுமான் உள்ளார்.
இந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்தப் பவுலர்களும் இவர்கள் மட்டுமே.