ஐசிசி டி20 உலககோப்பை 2021 தொடருடன் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி விடை பெற்றுள்ளார், துபாயில் நடைபெற்றுவரும் உலக கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியாத காரணத்தால் நேற்று நமீபியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியுடன் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
Photo : Getty Images |
2017 முதல் 2021 வரை:
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவரின் பதவிக் காலம் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.
தற்போது அவரின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இமயம் தொட்ட டெஸ்ட் கிரிக்கெட் :
கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரி அப்போது முதல் கேப்டன் விராட் கோலியுடன் கை கோர்த்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாடுபட்டார் என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரவி சாஸ்திரி - விராட் கோலி தலைமையில் இந்தியா மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிகளை குவிக்க தொடங்கியது.
அத்துடன் காலம் காலமாக சுழல் பந்துவீச்சை மட்டும் நம்பி இருந்த இந்திய கிரிக்கெட்டில் வேக பந்துவீச்சின் ஆதிக்கத்தை இந்த கூட்டணி அதிகப்படுத்தியது, இதன் காரணமாக கடந்த 5 வருடங்களாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிகள் இமயத்தை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அபாரம் :
2019/20 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது ரவிசாஸ்திரி - விராட் கோலி கூட்டணியின் வெற்றி பயணத்தில் உச்சபட்ச வெற்றி என்று கூறலாம், பொதுவாக ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது சுலபம் அல்ல அதுவும் அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது என்பது குதிரைக் கொம்பாகும்.
- அதற்கு சான்றாக 71 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியவில்லை ஆனால் அதை கடந்த 2019/20 இல் விராட் கோலி தலைமையிலான இந்தியா செய்து காட்டி சரித்திரம் படைத்தது.
- அதைவிட 2020/21 இல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்த போதிலும் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் வெற்றி பெற்று மீண்டும் சரித்திரம் படைத்தது ரவி சாஸ்திரி பயிற்சியின் உச்சகட்ட வெற்றியாகும்.
வெற்றிப்பயணம் :
டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரி - விராட் கோலி தலைமையில் வெளி நாடுகளில் இந்தியா வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது.
- இருப்பினும் 2019 இல் 50 ஓவர் உலக கோப்பை, 2021 இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை என ஒரு ஐசிசி உலகக் கோப்பையை மட்டும் இந்த கூட்டணியால் வெல்ல முடியவில்லை என்பது சோதனையான விஷயமாகும்.
சரி ரவி சாஸ்திரி தலைமையில் 3 வகையான கிரிக்கெட்டில் இந்தியா எவ்வளவு வெற்றிகளை குறித்து உள்ளது என்பது பற்றி பார்ப்போம்:
டெஸ்ட் கிரிக்கெட் : போட்டிகள் : 43, வெற்றிகள் - 25, தோல்விகள் - 13, ட்ரா - 5, வெற்றி விகிதம் - 58.14%.
ஒருநாள் கிரிக்கெட் : போட்டிகள் : 76, வெற்றிகள் - 51, தோல்விகள் - 22, டை/முடிவு இல்லை - 3, வெற்றி விகிதம் - 68.00%
டி20 கிரிக்கெட் : போட்டிகள் : 64, வெற்றிகள் - 44, தோல்விகள் - 18, வெற்றி விகிதம் - 70.97%
மொத்தமாக : போட்டிகள் : 183, வெற்றிகள் - 120, வெற்றி விகிதம் - 66.67%
இதிலுருந்தே ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா மோசமாக செயல்படவில்லை என்பதும் உலக கோப்பை தவிர எஞ்சிய போட்டிகளில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டதும் தெளிவாக தெரியவருகிறது.
முக்கிய வெற்றிகள் :
அதேபோல் ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா பதிவு செய்த முக்கிய மைல்கல் வெற்றிகள் பற்றி பார்ப்போம்:
1. கடந்த 2016 முதல் தொடர்ந்து 42 மாதங்களாக அதாவது 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா ஜொலித்தது.
2. 2019/20இல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ செய்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்றது.
3. அடுத்த வருடமே மீண்டும் அதே ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா மீண்டும் 2 - 1 என பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
4. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாற்றிலேயே அதிக ஆசிய கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையும் படைத்தது.
5. இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
6. இவர் பயிற்சியாளராக வகித்த இந்த காலகட்டத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இலங்கையிடம் ஒரு போட்டியில் கூட தோற்காமல் 9 - 0 வெற்றியை பதிவு செய்தது.
7. வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒரு ஒருநாள் தொடரை வென்றது - 2018.
8. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 தொடரை இந்தியா வென்றது.
9. நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என கைப்பற்றி உலக சாதனை படைத்தது.