ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் பரிதாபமாக வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Photo Credits : BCCI and ANI |
முன்னதாக இந்த உலக கோப்பையில் களமிறங்கிய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா உலககோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து பெருத்த அவமானத்தை சந்தித்தது, பின்னர் ஒரு வாரம் கழித்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் மீண்டும் படுதோல்வி அடைந்த இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.
ரன் ரேட் போராட்டம் :
இதை தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் ரன் ரேட்டை உயர்த்தவேண்டும் என்ற நிலைமையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா அபாரமாக செயல்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பதிவு செய்தது, அத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானின் கையை இந்தியா எதிர்பார்த்து காத்திருந்தது.
அந்த வேளையில் நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைய நமீபயாவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில் பங்கேற்பதற்காக முன்னரே அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
கபில் தேவ் :
இந்த உலக கோப்பையில் இந்தியா தோல்வி பெறுவதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மிகப்பெரிய காரணமாக அமைந்தது என பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ள இந்தியாவின் நிலைமை பற்றி ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஏபிபி நியூஸ் பக்கத்தில்,
நமது நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக நமது வீரர்கள் முக்கியத்துவம் அளிப்பதை பற்றி நான் என்ன சொல்வது? நமது வீரர்கள் நமது நாட்டுக்காக விளையாடுவதை மட்டுமே கௌரவமாக கருத வேண்டும். அவர்களது பொருளாதார நிலை எப்படி என்பது பற்றி எனக்கு தெரியாது எனவே இதைப்பற்றி நான் மேலும் கூறுவதற்கு ஒன்றுமில்லை
என தெரிவித்த அவர் எந்த ஒரு இந்திய வீரரும் முதலில் இந்தியாவிற்காக விளையாடுவதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஐபிஎல் என்பது இரண்டாவது என்பதை அவர்கள் உணர வேண்டும் என தெரிவித்தார் ஆனால் இந்திய வீரர்கள் பணத்திற்காக ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். அத்துடன் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைவதற்கு ஐபிஎல் ஒரு மிகப்பெரிய காரணம் என அவர் மறைமுகமாக கூறினார்.
பிசிசிஐ மோசம் :
எப்போதுமே முதலில் நீங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள் பின்பு ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள், அதற்காக ஐபிஎல் தொடரில் நீங்கள் விளையாட வேண்டாம் என நான் கூறவில்லை. இந்த வேளையில் தனது கிரிக்கெட்டை பிசிசிஐ பொறுப்புணர்ந்து திட்டமிட வேண்டும். இந்த உலக கோப்பையில் தோற்றது நமக்கு பாடத்தை கற்பித்துள்ளது இனி இதுபோன்ற தவறை செய்யக்கூடாது. ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 மிகப்பெரிய தொடர்களுக்கு முன்பாக ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என கருதுகிறேன்
என கூறிய கபில் தேவ் ஐபிஎல் தொடரால் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய வீரர்கள் தயாராவதற்கு போதிய கால இடைவெளி கொடுக்கவில்லை என பிசிசிஐ மீது குற்றம் சாட்டினார், இனிவரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கபில் தேவ் சொல்வது போல கடந்த ஜூலை மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரர்கள் அந்த தொடரை முடித்துக் கொண்டு நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர், ஐபில் 2021 தொடர் முடிந்த அடுத்த வாரத்திலேயே டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றனர், இப்படி தொடர்ச்சியாக விளையாடினால் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் மனதளவில் சோர்வடைந்து புத்துணர்ச்சி இல்லாமல் இறுதியில் தோற்க தான் செய்வார்கள்.