இங்கிலாந்தில் வரும் 2022 ஆம் ஆண்டு துவங்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 24 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, முதல் கட்டமாக மகளிர் கிரிக்கெட் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு தொடரில் 20 ஓவர் கிரிக்கெட் முறை கடைபிடிக்கப்பட உள்ளது.
Photo Credits : Getty Images |
இதன் வாயிலாக உலகப்புகழ் பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் மீண்டும் கிடைக்க உள்ளது, கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அட்டவணை :
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு வரும் ஜூலை 2022இல் தொடங்க உள்ளது, முதல் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் வலுவான அணியாக விளங்கும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஜூலை 29ஆம் தேதியில் மோதுகின்றன.
- அதன்பின் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் ஆகிய அணிகளுக்கு எதிராகவும் இந்திய மகளிர் அணியினர் களமிறங்கவுள்ளனர், இதில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கும் ஒரு சிறிய நாடான பார்படாஸ் சமீபத்தில் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பதக்கம்:
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் எதுவும் இல்லாமல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தங்கப்பதக்கமும் தோல்வி பெறும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும் அளிக்கப்பட உள்ளது, அதேபோல் வெண்கல பதக்கத்தை தீர்மானிக்கும் போட்டியும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட டாப் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன, இருப்பினும் சில சிறிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதற்காக தகுதி சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த தொடரை நடத்தும் இங்கிலாந்து தனது முதல் போட்டியில் ஜூலை 30ஆம் தேதியன்று களமிறங்க உள்ளது, 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஆகஸ்ட் 2ம் தேதியும் 3வது போட்டியில் நியூசிலாந்தை ஆகஸ்டு 4ஆம் தேதியும் எதிர்கொள்ள உள்ளது.
இந்த தொடர் மகளிர் கிரிக்கெட்டில் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டில் பங்கு பெறும் இந்திய அணியின் அட்டவணை:
- இந்தியா V ஆஸ்திரேலியா, ஜூலை 29.
- இந்தியா V பாகிஸ்தான், ஜூலை 31.
- இந்தியா V பார்படாஸ், ஆகஸ்ட் 3.