T20 World Cup 2021 : 9 ஆண்டுகளுக்கு பின் நாக் அவுட் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் இந்தியா பரிதாப தோல்வி

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றுடன் பரிதமாக வெளியேறியது.

Photo Credits : Getty Images


இந்த உலக கோப்பையில் இந்தியாவிற்காக கடைசி முறையாக டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி இந்தியாவிற்காக டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் நிறைவேறாத ஆசைகளுடன் விடைபெற்றார், அத்துடன் ஐபிஎல் உட்பட எந்த ஒரு முக்கிய டி20 கோப்பையையும் அவரால் கடைசி வரை வெல்ல முடியவில்லை.

மீள முடியாத இந்தியா :

முன்னதாக இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை கடந்த அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொண்டது, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அதன் காரணமாக உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்ற இந்தியா பெருத்த அவமானத்தையும் பெற்றது, அந்த போட்டியில் ஒரு பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டை கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறியது மேலும் வேதனையை அளித்தது.

அதன்பின் ஒரு வாரம் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியிலும் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது, இந்த அடுத்தடுத்த 2 படுமோசமான தோல்விகளில் இருந்து இந்தியா கடைசி வரை மீள முடியவில்லை என்றே கூறலாம்.

கை கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான்:

ஏனென்றால் அந்த வெறியை அதன்பின் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய கத்துக்குட்டிகளுக்கு எதிராக காட்டிய இந்தியா மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்தது.

இருப்பினும் அரைஇறுதிப்போட்டிக்கு செல்வதற்கு இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி பெற்றது, இதன் காரணமாக அக்டோபர் 8ஆம் தேதி நமீபியாவுக்கு எதிராக 1 போட்டி எஞ்சி இருக்கும் போதிலும் இந்தியாவால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றோடு பரிதாபமாக வெளியேறியுள்ளது.

தகர்ந்த கனவு :

இதன் வாயிலாக கடந்த 2007க்கு பின் மீண்டும் ஒரு ஐசிசி டி20 உலகக் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் 13 வருட கனவு மீண்டும் தகர்ந்து போனது.

  • கடந்த 2013க்கு பின் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் ஆசையும் நிறைவேறாமல் போனதால் இந்திய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.
  • கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

9 ஆண்டுகளுக்கு பின்:

அது மட்டுமல்லாமல் கடந்த 2013 க்கு பின் ஒரு ஐசிசி உலகக் கோப்பையில் குறைந்தபட்சம் நாக்அவுட் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் இந்தியா வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.

  • கடைசியாக கடந்த 2012இல் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியாமல் போனது.

கடந்த 2013க்கு பின் ஒவ்வொரு ஐசிசி உலக கோப்பையிலும் இந்தியாவின் செயல்பாடுகள் இதோ:

2014 டி20 உலககோப்பை : வங்கதேசத்தில் நடைபெற்ற 2014 டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அபாரமாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா இறுதியில் இலங்கையிடம் பரிதாப தோல்வி அடைந்தது.

2015 உலககோப்பை : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் 2011 உலகக்கோப்பையை வென்ற காரணத்தால் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

2016 டி20 உலககோப்பை : இம்முறை இந்திய மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி வரை முன்னேறி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது.

2017 சாம்பியன்ஸ் ட்ராபி : 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வெற்றி பெற்ற காரணத்தால் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியா பரபரப்பான இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து ஏமாற்றத்தை கண்டது.

2019 உலககோப்பை : இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை அபாரமாக விளையாடிய இந்தியா 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் மண்ணை கவ்வி மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்தது.

2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2019 முதல் நடைபெற்று வந்த வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் தொடரில் பட்டையை கிளப்பிய விராட் கோலி தலைமையிலான இந்தியா இங்கிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியது.

டி20 உலககோப்பை 2021: 9 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி பெருத்த தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction