T20 World Cup 2021 : 2 தோல்விகள், இந்தியா அரைஇறுதிக்கு செல்ல நிகழ வேண்டிய மிராக்கிள் இதோ

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் அடுத்தடுத்த 2 தோல்விகளால் விராட் கோலி தலைமையிலான இந்தியாவின் அரைஇறுதி கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

Photo : Getty Images


2 தொடர் தோல்விகள்:

இந்த உலக கோப்பையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்தியா உலககோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்று பெருத்த அவமானத்தை சந்தித்தது.

இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற 2வது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் நியூசிலாந்தை நேற்று சந்தித்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் தோற்றதன் வாயிலாக டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 50 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது அல்லது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்  இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் அதற்கு மிராக்கள் ஏதாவது தான் நடைபெற வேண்டும்.

ஹீரோ முதல் ஜீரோ:

இந்த உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்த உலக கோப்பையை வெல்லப் போகும் ஒரு அணியாக இருந்த இந்தியா தற்போது அரையிறுதிக்கு கூட தகுதி பெற திண்டாடி வருவது இந்திய ரசிகர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என 2 போட்டிகளிலுமே இந்தியாவின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை, பந்துவீச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 2 விக்கெட் மட்டுமே எடுத்தது, அந்த 2 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா எடுத்தார், இதர பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

நிகழ வேண்டிய மிராக்கிள்:

சரி இந்த உலக கோப்பையில் இந்தியாவிற்கு இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 2 தொடர் தோல்விகளுக்கு பின்பும்கூட இந்தியாவால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்பது பற்றிய அலசல் இதோ:

இந்தியாவின் எஞ்சிய 3 போட்டி அட்டவணை

  • இந்தியா V ஆப்கானிஸ்தான், நவம்பர் 3, அபுதாபி.
  • இந்தியா V ஸ்காட்லாந்து, நவம்பர் 5, துபாய்.
  • இந்தியா V நமீபியா,  நவம்பர் 8, துபாய்.

1. நெட் ரன் ரேட் : இரண்டு போட்டிகளில் தோற்றது மட்டுமல்லாமல் படுமோசமாக தோற்ற காரணத்தால் இந்தியாவின் ரன் ரேட் தற்போது - 1.609 ஆக உள்ளது, மறுபுறம் ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான் + 3.097 என்ற மிகவும் சிறப்பான ரன்ரேட் கொண்டுள்ளது.

எனவே அரையிறுதிக்கு செல்வதற்கு எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட்டை உயர்த்தி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை தொட முடியும்.

2. ஆப்கானிஸ்தான் உதவி: அதேபோல் இந்தியா அரைஇறுதிக்கு செல்ல வேண்டுமெனில் ஆப்கானிஸ்தானின் உதவி கண்டிப்பாக தேவைப்படுகிறது, ஆம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் மேலும் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் நியூசிலாந்தை விட அதிகமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானுக்கு சிறிய அளவிலான வெற்றியே போதுமானது.

  • அதே சமயம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இந்தியா சிறிய அளவில் அல்லாமல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும், ஒருவேளை அப்போட்டியில் இந்தியா தோற்றால் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு அத்தோடு முடிந்துவிடும்.

3. நமீபியா, ஸ்காட்லாந்து : ஆப்கானிஸ்தான் போலவே சிறிய அணிகளான நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 2 அணிகளும் நியூசிலாந்தை தோற்கடிக்க வேண்டும், அவ்வாறு நடந்தால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

ஆனால் தற்போதைய வேலையில் இந்த 2 அணிகளும் நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடாமல் தோற்று வருகிறது.

வாய்ப்பு குறைவு:

3 அடுத்தடுத்த வெற்றிகளால் அரையிறுதிக்கு பாகிஸ்தான் முதல் அணியாக தகுதி பெற்று விடும் என்பதில் சந்தேகமில்லை எனவே மேற்கூறிய 3 வாய்ப்புகளும் நிகழ்ந்தால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் 3 வெற்றிகளுடன் தலா 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு போட்டி போடும்.

அந்த வேளையில் எந்த அணிக்கு நெட் ரன் ரேட் சிறப்பாக உள்ளதோ அவர்கள் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு சென்றுவிடுவார்கள், மொத்தத்தில் தற்போதைய நிலையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில் அதற்கு மெடிக்கல் மிராக்கள் நிகழ வேண்டுமென உங்களுக்கே புரியும்.

Previous Post Next Post

Your Reaction