ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையில் அடைந்த தோல்வியை அடுத்து புதிய டி-20 கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் சொந்த மண்ணில் நியூசிலாந்தை 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா எதிர் கொண்டது.
Photo Credits : BCCI |
- கடந்த நவம்பர் 17 அன்று ஜெய்ப்பூரில் துவங்கிய தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் வெற்றி பெற்று 2 - 0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி போட்டியிலும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 - 0 என நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
சரி இந்த தொடரின் முடிவில் இந்தியாவும் இந்திய வீரர்களும் படைத்த சில முக்கிய மைல்கல் சாதனைகள் பற்றி பார்ப்போம்:
1. இன்று தொடரை 3 - 0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலும் தனது சொந்த மண்ணிலும் வைட்வாஷ் செய்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
- மேலும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த 2 டி20 தொடர்களை ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
- கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 எனவும் தற்போது இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 எனவும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
2. ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது ஒயிட்வாஷ் செய்து இந்தியா வெற்றி பெறும் 6வது தொடராகும்.
3. கடந்த 2019 முதல் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 20 ஓவர் தொடர்களிலும் தொடர்ச்சியான 5 வெற்றிகளை வெற்றி பெற்று இந்தியா சாதனை புரிந்துள்ளது. அவை:
- 2 - 1 என வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி, 2019/20.
- 2 - 1 என இலங்கைக்கு எதிராக வெற்றி, 2019/20.
- 2 - 1 என வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி, 2019/20
- 3 - 2 என இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி, 2020/21.
- 3 - 0 என நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி, 2021/22.
அத்துடன் இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற 2 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது.
- 2 - 1 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வெற்றி, 2019/20.
- 5 - 0 என நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தில் வெற்றி, 2019/20.
Photo : BCCI |
4. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒயிட் வாஷ் தொடர் வெற்றிகளை குவித்த அணி என்ற உலக சாதனையை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுமே அதிகபட்சமாக வரலாற்றில் தலா 6 முறை வைட்வாஷ் டி20 தொடரை வென்று உள்ளன.
5. ரோஹித் சர்மா :
நேற்றைய போட்டியில் 56 ரன்கள் அடித்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முந்தி புதிய உலக சாதனையை படைத்தார்.
- ரோஹித் சர்மா - 30
- விராட் கோலி - 29
- பாபர் அசாம் - 25.
6. அதேபோல் நேற்றைய போட்டியில் 3 சிக்சர்களை அடித்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 சிக்ஸர்களை அடித்த 2வது வீரர் மற்றும் முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
- நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 150 சிக்சர்களை அடித்த முதல் வீரர் ஆவார்.
7. முழுநேர டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இந்தியாவிற்காக இதுவரை 22 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்து 18 வெற்றிகளை குவித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றி சராசரியை கொண்ட இந்திய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
- ரோஹித் சர்மா - 81.81%
- விராட் கோலி - 64.60%
- எம்எஸ் தோனி - 59.35%
இதில் ஆச்சரியம் என்னவெனில் ரோகித் சர்மா இதுவரை கேப்டன்ஷிப் செய்துள்ள இந்த 22 போட்டிகளில் ஒரு முறை கூட விராட் கோலி பங்கேற்றது இல்லை.
8. நேற்றைய போட்டியுடன் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 முறை 50+ ஓபனிங் பார்ட்னர்ஷிப் குவித்த அணி என்ற உலக சாதனைய இந்தியா படைத்தது.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக துவங்கிய இந்த சாதனை நேற்றைய போட்டி வரை தொடர்ந்தது.
- 140 - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, அபுதாபி, 2021
- 70 - ஸ்காட்லாந்துக்கு எதிராக, துபாய், 2021.
86 - நமீபியாவுக்கு எதிராக, துபாய், 2021.
- 50 - நியூஸிலாந்துக்கு எதிராக, ஜெய்ப்பூர், 2021.
- 117 - நியூசிலாந்துக்கு எதிராக, ராஞ்சி, 2021.
- 69 - நியூசிலாந்துக்கு எதிராக,கொல்கத்தா, 2021.
இதில் 5 முறை ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடியும், நேற்றைய 6வது போட்டியில் ரோகித் சர்மா - இஷான் கிசான் ஜோடியும் 50 ரன்கள் குவித்தது.
9. நியூசிலாந்துக்கு எதிராக சமீப காலங்களாக இந்தியாவின் வெற்றி இமயத்தை தொட்டுள்ளது.
- 2016 வரை - வெற்றிகள் - 9, தோல்விகள் - 5.
- 2016 - 2019 வரை : 3 வெற்றிகள், 3 தோல்விகள்.
- 2020 முதல் தற்போது வரை - 8 வெற்றிகள், 1 தோல்வி.
10. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.