இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 21ஆம் தேதி புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Photo Credits : BCCI |
போட்டி விவரம்:
இந்தியா V நியூஸிலாந்து, 3வது டி20, இரவு 7 மணி, ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தா.
நேரடி ஒளிபரப்பு :
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.
முன்னோட்டம்:
இந்தியா : ஐசிசி உலக கோப்பை 2021 தொடரில் படுதோல்வி அடைந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா தற்போது புதிதாக முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில் அடுத்தடுத்த 2 வெற்றியுடன் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
- ஜெய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய 2 நகரங்களில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலுமே இந்தியாவின் ஆதிக்கம் அபாரமாக இருந்த காரணத்தால் வெற்றிகளைப் பெற்றது.
முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே தொடக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் பட்டய கிளப்ப நடுவரிசையில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் தேவையான ரன்களை அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர்.
பந்துவீச்சில் தமிழகத்தின் அனுபவம் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார், இவருடன் அக்ஷர் பட்டேல் சுழல்பந்து வீச்சில் கலக்குகிறார்.
- ஆனாலும் பார்ம் இல்லாமல் தவிக்கும் புவனேஸ்வர் குமார் ரன்களை வாரி வழங்கும் தீபக் சஹர் ஆகியோரால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சற்று பலவீனமாக உள்ளது.
2வது போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார் ஏற்கனவே தொடரை 2 - 0 என கைப்பற்றி உள்ளதால் வரும் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து 3-வது போட்டியில் ருதுராஜ் போன்ற மேலும் சில இளம் வீரர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.
- அதேபோல் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஹால் போன்ற இதர வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என நம்பலாம்.
சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி போன்ற முக்கிய போட்டிகளில் தோல்வயை பரிசளித்த நியூசிலாந்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்று 3 - 0 என வைட்வாஷ் தோல்வியை பரிசளிக்க இந்தியா தயாராக உள்ளது.
Photo Credits : Getty Images |
நியூஸிலாந்து : நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை சமீபத்திய டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்வியால் கிடைத்த மனச்சோர்வில் இருந்து இன்னும் முழுதாக மீள முடியவில்லை.
- போதாக்குறைக்கு அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இத்தொடரில் ஓய்வு எடுப்பதால் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை கொடுக்கிறது.
மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் திடீரென நியூசிலாந்து வீரர்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பதை கடந்த சில போட்டிகளில் பார்க்க முடிந்தது.
இருப்பினும் கூட மார்ட்டின் கப்டில், கிளென் பிலிப்ஸ், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதீ போன்ற வெற்றியைப் பெற்றுத் தரக் கூடிய தரமான வீரர்கள் அந்த அணியில் நிறைந்துள்ளதால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க அந்த அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை.
நியூஸிலாந்தின் வெற்றிக்கு அந்த அணியில் மார்ட்டின் கப்தில், டார்லிங் மிட்செல், மார்க் சேப்மேன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீசம் போன்ற நடுவரிசை வீரர்களும் ரன்கள் குவிக்க வேண்டும், அதேசமயம் பந்துவீச்சில் இந்தியாவின் ரோகித் - ராகுல் ஜோடியை ஆரம்பத்திலேயே அவுட் செய்யும் பட்சத்தில் வெற்றியை நெருங்கலாம்.
- மேலும் சுழல் பந்துவீச்சில் அஸ்வின், அக்ஷர் பட்டேல் போல மிட்செல் சான்ட்னர், இஸ் சோதி ஜோடி கண்டிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
புள்ளிவிவரம் :
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 20 போட்டிகளில் இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, நியூஸிலாந்து 9 போட்டிகளில் வென்றுள்ளது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
போட்டி நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் இந்தியா 4 முறை வென்றுள்ளது, நியூசிலாந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
- போட்டி நடைபெறும் இடம் கார்டன் மைதானத்தில் இந்த 2 அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.
- புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா களம் இறங்கிய 4 போட்டிகளில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது, 1 போட்டியில் தோல்வி அடைந்தது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் கொல்கத்தா நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை எனவும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை மையம் கூறுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சம அளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் வரலாற்றில் இங்கு இதற்கு முன்னர் நடைபெற்ற 7 சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 142 ஆகும், எனவே இம்மைதானத்தில் பேட்டிங்கை விட பவுலிங் சற்று அதிகமாக எடுபடும் என எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் இரவு நேர போட்டிகள் என்பதால் முதல் 2 போட்டிகளை போல பனியின் தாக்கத்தால் பந்துவீச்சாளர்கள் சற்று சிரமப் படுவார்கள் என்பதால் திறமையான பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிப்பார்கள்.
வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடைபெற்ற 7 சர்வதேச டி20 போட்டிகளில் 5 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்ற, 2 முறை மட்டுமே முதலில் பேட் செய்த அணிகள் வென்றன.
எனவே 3வது போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச்சை தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.