இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டி நவம்பர் 19ஆம் தேதி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
Photo Credits : BlackCaps |
போட்டி விவரம்:
இந்தியா V நியூஸிலாந்து
2வது டி20 போட்டி, நவம்பர் 19, இரவு 7 மணி, ஜேஎஸ்சிஏ சர்வதேச விளையாட்டு காம்ப்லெஸ் மைதானம், ராஞ்சி.
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.
முன்னோட்டம்:
நியூஸிலாந்து : சில தினங்களுக்கு முன் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணியினர் வெறும் 2 நாட்கள் இடைவெளியில் இந்தியாவில் இந்த தொடரில் தொடரில் பங்கேற்று வருகிறார்கள், கேப்டன் கேன் வில்லியம்சனும் ஓய்வு எடுப்பதால் நியூசிலாந்து வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போயுள்ளது முதல் போட்டியில் தெளிவாகக் காண முடிந்தது.
- இருப்பினும் கூட ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெரும் நிலையில் இருந்த இந்தியாவை கடைசி ஓவர் வரை மடக்கிப்பிடித்த டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியினர் போராடி தோற்றது.
தற்போதய நிலையில் தொடரை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் அந்த அணிக்கு பேட்டிங்கில் மார்டின் கப்தில் மற்றும் மார்க் சேப்மேன் (109 ரன்கள் பார்ட்னர்ஷிப்) ஆகியோர் தவிர முதல் போட்டியில் வேறு எவரும் சிறப்பாக ரன் குவிக்கவில்லை, எனவே அவர்களுடன் 2வது போட்டியில் இதர பேட்ஸ்மேன்களும் கை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெறலாம்.
அதேபோல் பந்து வீச்சிலும் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் போன்ற இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்தால் மட்டுமே நியூசிலாந்து 2வது போட்டியில் வெற்றி பெற்று இந்தத் தொடரை வெல்வதற்கு போராட முடியும். வெற்றிக்கு ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதீ, மிட்சேல் சாட்னர் போன்ற அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியா : இந்திய அணியை பொருத்தவரை நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது, ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியா 2வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தயாராக உள்ளது.
- உலகக்கோப்பை இந்திய அணியில் சுமார் 4 வருடங்களுக்கு பின் திரும்பிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பந்துவீச்சில் பெரிய நம்பிக்கையாக உள்ளது.
இருப்பினும் முதல் போட்டியில் 6 - 12 ஓவர்கள் வரையிலான காலகட்டத்தில் இந்திய பவுலர்கள் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்குவதும் அதேபோல் இந்த காலகட்டத்தில் இந்திய பேட்டர்கள் ரன்கள் குவிக்க தடுமாறுவதும் இந்தியாவிற்கு கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருப்பதால் 2வது போட்டியின் போது அதில் கவனம் செலுத்த வேண்டும்.
புள்ளிவிவரம் :
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.
- அதில் இரு அணிகளும் தலா 9 முறை வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
அதேபோல போட்டி நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெதர் ரிப்போர்ட் :
இந்த போட்டி நடைபெறும் ராஞ்சி நகரில் போட்டி நாளன்று மழை பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
- இப்போட்டி இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கேப்டன் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்குமே சமூகமாக கைகொடுக்கும் என்றாலும் இரவு நேர போட்டி என்பதாலும் நவம்பர் மாதம் என்பதாலும் இம்மைதானத்திலும் பனி மற்றும் அதீத ஈரப்பதத்தை எதிர்பார்க்கலாம்.
எனவே பந்துவீச்சை விட பேட்டிங் சற்று எளிதாக இருக்கும், இந்த மைதானத்தில் இதற்கு முன் நடைபெற்ற டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் 152 ஆகும்.