IND vs NZ 1st Test 2021 : டெஸ்ட் சாம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்துமா இந்தியா, புள்ளிவிவரம், கான்பூர் மைதான பிட்ச்,வெதர் ரிப்போர்ட்

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதி கான்பூரில் துவங்க உள்ளது.

Photo Credits : Getty Images


போட்டி விவரம்:

இந்தியா V நியூஸிலாந்து, முதல் டெஸ்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.

காலை 9.30 மணி, நவம்பர் 25 - 29, கான்பூர், உத்திரபிரதேசம்.

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.

முன்னோட்டம்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என இந்தியா அபார வெற்றி பெற்றது, இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 25 முதல் துவங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் கேன் வில்லியம்சன், விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நியூஸிலாந்து : டி20 தொடரில் ஓய்வு எடுத்த நியூசிலாந்தின் முதுகெலும்பு வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட் தொடருக்கு திரும்ப உள்ளது அந்த அணிக்கு பலத்தை சேர்க்கிறது.

ராஸ் டெய்லர், ஜமிசன் போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் அந்த அணிக்கு திரும்புவது மேலும் பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

  • அத்துடன் சமீபத்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதல் சாம்பியனாக நியூசிலாந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ளது.

எனவே இந்த தொடரிலும் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 - 23 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைத்துக் கொள்ள நியூசிலாந்து தயாராக உள்ளது.

இந்தியா : கான்பூரில் துவங்கும் இந்த முதல் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட், ஷமி, பும்ரா, ராகுல் என முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா களம் இறங்குவது சற்றே பின்னடைவாகும்.

ஏற்கனவே பார்ம் இல்லாமல் தவிக்கும் அஜிங்கிய ரஹானே, புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் கில், மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்கள் கை கொடுப்பார்கள் என நம்பலாம்.

வேகப்பந்துவீச்சில் அனுபவங்களால் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் கை கொடுக்க வேண்டும். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான கான்பூரில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஜொலித்தால் இந்தியாவின் வெற்றி நிச்சயம்.

  • முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தை தோற்கடிக்க இந்தியாவும் தயாராக உள்ளது.

புள்ளிவிவரம்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவும் நியூசிலாந்தும் மொத்தம் 60 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

  • அதில் இந்தியா 21 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது, நியூசிலாந்து 13 போட்டிகளில் வென்றது, எஞ்சிய 26 போட்டிகள் டிராவில் முடிந்தன.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய 19 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 11 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 4 முறை வெற்றி பெற்றது, எஞ்சிய 4 தொடர்கள் ட்ராவில் முடிந்தன.

  • இந்த தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன, அதில் இந்தியா 16 போட்டிகளில் வென்று இந்தியா வலுவான அணியாக உள்ளது. நியூஸிலாந்து 2 போட்டிகளில் வென்றது, 16 போட்டிகள் டிராவில் முடிந்தன.
Photo : Getty


வெதர் ரிப்போர்ட் :

இப்போட்டி நடைபெறும் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் போட்டியின் 5 நாட்களிலும் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது, வழக்கம் போல லேசான மேகமூட்டத்துடன் வானம் காட்சி அளிக்கும்.

பிட்ச் ரிப்போர்ட்:

கான்பூர் மைதானம் வழக்கமான இந்திய ஆடுகளங்களை போல சுழல் பந்து வீச்சுக்கு அதிகமாக கை கொடுக்கும், அதே சமயம் போட்டியின் முதல் 2 நாட்களில் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடும் பேட்ஸ்மென்கள் எளிதாக ரன்கள் குவிக்கலாம்.

அதேபோல் தற்போது கான்பூர் நகரில் குளிர்காலம் என்பதால் ஈரப்பதம் மிகுந்த காற்று முதல் 2 நாட்கள் மற்றும் ஒவ்வொரு நாளின் ஆரம்ப கட்டத்திலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கலாம்.

உத்தேச அணிகள்:

இந்தியா : சுப்மன் கில், மயங் அகர்வால், சேடேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரகானே (கேப்டன்), ஷரயஸ் ஐயர், வ்ரிதிமான் சஹா (கீப்பர்), ரவீந்தர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சார் படேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து: டாம் லாதாம், டேவோன் கோன்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டேல் (கீப்பர்), கைல் ஜேமிசன், டிம் சௌதீ, மிட்செல் சாட்னெர், அஜஸ் படேல், நெய்ல் வாக்னர்.

Previous Post Next Post

Your Reaction