ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது, கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி துபாயில் துவங்கிய இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று பின்னர் இறுதிப்போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
Photo : Getty Images |
ஆஸ்திரேலியா சாம்பியன் :
இதை அடுத்து நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
- இதை அடுத்து வரும் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது.
தேதி, மைதானம் அறிவிப்பு:
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான தேதிகள் மற்றும் எந்த மைதானங்களில் நடைபெற உள்ளன போன்ற முழு விவரத்தையும் இந்த உலக கோப்பையை நடத்த இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி
வரும் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி துவங்கும் ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2022 தொடர் நவம்பர் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெற உள்ளது.
ரவுண்ட் 1 சுற்று, சூப்பர் 12 சுற்று நாக் அவுட் சுற்று உட்பட இந்த உலகக் கோப்பையில் நடைபெறும் 45 போட்டிகளும் கீளொக், ஹோபார்ட், அடிலெய்டு, பிரிஸ்பேன், பெர்த், சிட்னி, மெல்போர்ன் ஆகிய ஆஸ்திரேலியாவின் முக்கியமான 7 நகரங்களில் நடைபெற உள்ளன.
மைதானங்கள்:
இதில் ரவுண்ட் 1 போட்டிகள் கீளொக் மற்றும் ஹோபார்ட் ஆகிய நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெற உள்ளது.
அதேபோல் இந்த உலக கோப்பையின் நாக் அவுட் சுற்றான அரையிறுதி சுற்றில் முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது, 2வது அரையிறுதிப் போட்டி புகழ்பெற்ற அடிலைட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
- பின் உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 13ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டி 1,00,000 ரசிகர்களுக்கு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
தகுதி பெற்றுள்ள அணிகள்:
இந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு போட்டியை நடத்தும் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதம் உள்ள 4 அணிகளை தேர்வு செய்ய நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும் ரவுண்ட் 1 சுற்றில் உலகக் கோப்பை 2022 குவாலிபயர் சுற்றில் வெற்றி பெற்று உள்ளே வரும் 4 அணிகளுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த உலகக் கோப்பைக்கான முழு அட்டவணையும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.