T20 World Cup 2021 : நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம்

ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வரலாற்றின் 7வது ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியது, மொத்தம் 16 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் கலக்கிய இங்கிலாந்து,  ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அசத்தினர்.

Photo Credits : Getty Images

பின்னர் நடந்த அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்தும் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

மாபெரும் பைனல்:

இதை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் கோலாகலமாகத் துவங்கியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எதிர்பார்த்தது போலவே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

  • ஏனெனில் இந்த உலக கோப்பையில் பைனலுக்கு முன்பு வரை துபாயில் நடைபெற்ற 12 போட்டிகளில் 11 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன.

தடுமாறிய நியூஸிலாந்து காப்பாற்றிய வில்லியம்சன்:

இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டார்ல் மிட்சேல் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார், மறுபுறம் பவர்ப்ளே ஓவர்களில் ஆஸ்திரேலியா அபாரமாக பந்து வீசியதால் முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து 57/1 என தடுமாறியது, இருப்பினும் தடுமாற்றத்திற்கு அஞ்சாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி நியூசிலாந்தை சரிவிலிருந்து மீட்டார்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 21 ரன்களில் கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலிய அணியினர் கோட்டைவிட பின்னர் நாலாபுறமும் அடித்து விளையாடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 85 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

  • இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இறுதியில் கப்டில் 28 ரன்களும், பிலிப்ஸ் 18 ரன்களும், நீசம் 13* ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூஸிலாந்து 172/4 ரன்கள் எடுத்தது.

  • ஆஸ்திரேலியா சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் ஆடம் சாம்பா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அபாரம் :

இதை தொடர்ந்து 173 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் கேப்டன் ஆரோன் பின்ச் வெறும் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் மிட்சேல் மார்ஷ் உடன் இணைந்து 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் அவுட்டானார்.

வார்னர் அவுட் ஆன போதிலும் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை உட்பட 77* ரன்கள் எடுக்க இறுதியில் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் வெறும் 18 பந்துகளில் 28* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா வெறும் 18.5 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து ரன்கள் எடுத்து இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சாம்பியன்:

இதன் வாயிலாக ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்தது, இதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலிய வென்று சரித்திரம் படைத்தது.

ஏற்கனவே 5 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் ட்ராபி என பல ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் அரசனாக விளங்கிய ஆஸ்திரேலியா தற்போது முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று மேலும் ஒரு மகுடம் சூட்டியுள்ளது.

மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும் துல்லியமாக பந்துவீச தவறிய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் முறையாக டி20 உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

Previous Post Next Post

Your Reaction