T20 World Cup 2021: ஐசிசி பைனல்களில் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை நடத்திய வரலாறு

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 17இல் துவங்கிய இந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் கலக்கிய இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தின.

Photo Credits : Getty Images


அரைஇறுதி சுற்று :

முதல் அரைஇறுதி:

இதை அடுத்து அபுதாபியில் துவங்கிய அரையிறுதி சுற்றின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் இங்கிலாந்து நிர்ணயித்த 167 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மிட்சேல் 72* ரன்கள், டேவோன் கான்வே 46 ரன்கள் எடுத்து வெற்றிபெற செய்தனர்.

இந்த வெற்றியால் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.

  • மறுபுறம் இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய முதல் அணியாகக் கருதப்பட்ட இயன் மோர்கன் தலைமையிலான வலுவான இங்கிலாந்து அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

2வது அரை இறுதி:

அதை தொடர்ந்து நேற்று துபாயில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத பாகிஸ்தானை ஆஸ்திரேலியா எதிர்கொண்டது, இப்போட்டியில் டாஸ் தோற்ற போதிலும் அபாரமாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 176/4 ரன்கள் குவித்தது.

பின் 177 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 49 ரன்கள் எடுக்க இறுதியில் ஸ்டோனிஸ் 40* ரன்களும் மேத்தியூ வேட் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 41* ரன்களும் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தனர், இந்த பரபரப்பான வெற்றியால் ஆஸ்திரேலியா மீண்டுமொரு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  • இந்த தோல்வியால் உலகக்கோப்பையில் தோல்வியே அடையாமல் வெற்றி நடை போட்டு வந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்து ஐசிசி உலக கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து 5வது முறையாக ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்வியது.

மாபெரும் பைனல் :

இதை அடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நவம்பர் 16 அன்று துபாயில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இப்போட்டியை முன்னிட்டு வரலாற்றில் இதற்கு முன் ஐசிசி தொடரின் பைனல்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டிகளைப் பற்றி பார்ப்போம்:

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2009 :

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

பின்னர் தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார் ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் யாரும் ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

  • குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பிரன்டன் மெக்கலம் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாக அதிகபட்சமாய் மார்ட்டின் கப்டில் 40 ரன்கள், ப்ரூம் 37 ரன்கள், பிராங்கிளின் 33 எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து வெறும் 200/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய நாதன் ஹரூட்ஸ் 3 விக்கெட்டுகளும் பிரட் லீ 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்

பின் 201 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டிம் பைன் ஆகியோர் தலா 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் மறுபுறம் பட்டையை கிளப்பிய மற்றொரு தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்து 105* ரன்கள் விளாசினார்.

இவருடன் கேமரூன் ஒயிட் 62 ரன்கள் எடுக்க 45.2 ஓவர்களிலேயே 206/4 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது, சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட வாட்சன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஐசிசி உலககோப்பை 2015:

கடந்த 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன, உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் இம்முறையும் அந்த அணியின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் டக் அவுட் ஆனார், அவருடன் கேன் வில்லியம்சன் 12 ரன்கள் மார்டின் கப்தில் 15 ரன்கள் என அடுத்தடுத்த முக்கிய வீரர்கள் வரிசையாக அவுட் ஆனதால் அதிலிருந்து மீளமுடியாத நியூசிலாந்து 45 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • நியூஸிலாந்து சார்பில் தனி ஒருவனாக போராடிய கிராண்ட் எலியட் 83 ரன்களும் ராஸ் டைலர் 40 ரன்களும் எடுத்தனர், ஆஸ்திரேலியா சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின் 184 என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த டேவிட் வார்னர் 45 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 56* ரன்கள் எடுக்க தனது கடைசி போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 72 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதனால் வெறும் 33.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடிக்க ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக உலக கோப்பை வென்று உலக சாதனை படைத்தது.

Previous Post Next Post

Your Reaction