ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் நேற்று தனது டுவிட்டரில் அறிவித்தார், எவ்வளவு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் எவ்வளவு கடினமான நேரத்தில் எவ்வளவு கடினமாக பந்து வீசினாலும் அதை அசால்ட்டாக மைதானத்தின் எந்த ஒரு மூலைக்கும் சிக்ஸர் பறக்க விடுவதில் ஏபி டிவிலியர்ஸ் வல்லவர்.
Photo Credits : BCCI/IPL |
சொல்லப்போனால் நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஏபி டிவில்லியர்ஸ் உருவாக்கிய புதுவித வித்யாசமான ஷாட்கள் ஏராளம், இதனாலேயே ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் கொண்டாடப்படுகிறார்.
ஏமாற்றிய ஏபி டீ வில்லியர்ஸ்:
ஏற்கனவே கடந்த 2019 உலகக்கோப்பை துவங்க இருந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் ஐபிஎல் உட்பட சில பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வந்த அவர் மிகவும் அபாரமாக விளையாடிய காரணத்தால் தென்னாப்பிரிக்காவுக்காக மீண்டும் விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் தனது 37வது வயதிலேயே ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது என்று கூறலாம்.
- ஏனெனில் கிறிஸ் கெயில் போன்ற சில நட்சத்திர வீரர்கள் 40 வயதைத் தாண்டியும் விளையாடுகிறார்கள்.
RCB யில் விடைபெற்ற ஜாம்பவான்கள்:
இதை அடுத்து டிவில்லியர்ஸ் கிரிக்கெட் பயணத்தில் தனது கடைசி போட்டி இந்தியாவின் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முடிந்துள்ளது.
அவரை போலவே வரலாற்றில் பெங்களூர் அணியில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த 4 ஜாம்பவான்கள் பற்றி பார்ப்போம்:
1. டேல் ஸ்டைன் : டீ விலியர்ஸ் போலவே தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வரலாற்றின் அதிரடியான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் கடந்த 2008 - 2010 போன்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். பின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் இருந்து 2017 -2018 ஆகிய வருடங்களில் விலகியிருந்தார்.
இருப்பினும் 2019 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வண்ணம் பெங்களூர் அணிக்காக மீண்டும் விளையாடி அவர் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார், அதன்பின் எந்தவிதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்தார்.
2. ப்ரெண்டன் மெக்கல்லம் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம், நியூசிலாந்தை முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான நியூசிலாந்தின் அதிரடி நட்சத்திர ஜாம்பவான் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார்.
2014 போன்ற காலக்கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தனது கடைசி போட்டியில் அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடி விடை பெற்றார்.
3. முத்தையா முரளிதரன் : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த உலக சாதனை படைத்த இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 2008 - 2010 வரையிலான காலகட்டத்தில் சென்னை அணிக்காக விளையாடினார்.
பின் 2011இல் கொச்சி அணிக்காக விளையாடிய அவர் அதை தொடர்ந்து பெங்களூரு அணிக்காக 2014 வரை விளையாடினார், கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அவர் தனது கடைசி போட்டியில் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக மே 22, 2014 அன்று கொல்கத்தா அணிக்கு எதிராக புகழ் பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடினர்.
4. அனில் கும்ப்ளே : 1000 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான பந்து வீச்சாளராக சாதனை படைத்த ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மட்டுமே 2008 - 2010 ஆகிய காலகட்டங்களில் விளையாடினார்.
- பெங்களூரு அணிக்காக 42 போட்டிகளில் பங்கேற்று 45 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனது வாழ்நாளில் கடைசி போட்டியாக கடந்த 2010 ஏப்ரல் 24 டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
2010 சாம்பியன்ஸ் லீக் தொடரில் தகுதி பெறும் 3வது அணியை தேர்வு செய்யும் அந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூர் அணியை வெற்றி பெற செய்து ஆட்டநாயகன் விருதுடன் அவர் விடைபெற்றார்.