ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.
Photo Credits : Getty Images |
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த உலகக் கோப்பையை தொடங்கிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றபோதே இந்தியாவின் அரைஇறுதி கனவு தகர்ந்து போனது.
கத்துக்குட்டிகளிடம் வீரம்:
பின்னர் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த போதிலும் நமீபியாவுக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பே இந்தியாவின் உலககோப்பை கனவு தகர்ந்தது.
சரி இந்த உலக கோப்பையில் இந்தியாவின் பரிதாப தோல்விக்கு வித்திட்ட 6 காரணங்கள் பற்றி பார்ப்போம்:
1. பேட்டிங் : இந்த உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு மோசமான பேட்டிங் முதல் காரணமாகும், குறிப்பாக முதல் போட்டியில் பாகிஸ்தானின் அதிரடியான வேகபந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் நியூசிலாந்துக்கு எதிராக சுத்தமாக எடுபடவில்லை.
இதனால் கேள்விக்குறியான அரையிறுதி வாய்ப்பை எட்டி பிடிப்பதற்காக ரன் ரேட்டை உயர்த்தும் வண்ணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்டர்கள் விஸ்வரூபம் எடுத்து ரன் மழை பொழிந்த போதிலும் அதனால் இந்தியாவிற்கு ஒரு பயன் கூட இல்லாமல் போனது.
2. பவுலிங் பரிதாபம்: பேட்டிங் தான் அப்படி என்று பார்த்தால் பந்து வீச்சு அதைவிட மோசமாக இருந்தது, குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானிடம் முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்ற போட்டியில் இந்திய பவுலர்களால் 1 விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.
- பின்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா தவிர யாரும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, அந்த அளவுக்கு இந்தியாவின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது.
3. ரவிச்சந்திரன் அஷ்வின் : 4 வருடங்களுக்குப் பின்னர் உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அனுபவ சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் பெஞ்சில் மட்டுமே அமர வைக்கப்பட்டார், இத்தனைக்கும் அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பை பயிற்சி போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
- ஆனால் காலம் கடந்த பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, கிடைத்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட அவர் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
4. ஐபிஎல் 2021 : டி20 உலக கோப்பை நடைபெற்ற அதே ஐக்கிய அரபு நாடுகளில் டி20 உலக கோப்பை துவங்கும் சில தினங்களுக்கு முன்புதான் ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது, அதாவது ஐபில் 2021 தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு தேவையான நேரமும் கால அவகாசமும் சுத்தமாக கிடைக்கவில்லை என்பதும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
- நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நீண்ட நாட்கள் இருப்பது மிகப்பெரிய சவாலை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா இது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
5. எம்எஸ் தோனி - ஆலோசகர் : இந்த உலகக் கோப்பை இந்திய அணியின் ஆலோசகராக சமீபத்தில் ஓய்வு பெற்ற நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது, 2007இல் வரலாற்றின் முதல் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அவர் சமீபத்தில் ஐபிஎல் 2021 கோப்பையையும் வெற்றி பெற்றார்.
இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு ஆதரவும் வரவேற்பும் தெரிவித்த வேளையில் கௌதம் கம்பீர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் எம்எஸ் தோனி திடீரென எதற்காக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் அதுவும் உலககோப்பைகாக மட்டும் எதற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என புரிந்து கொள்ள முடியவில்லை என விமர்சனம் செய்தனர்.
- ஏற்கனவே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கும் வேளையில் டோனியும் அணியில் இருப்பதால் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் யார் முடிவு இறுதியில் தீர்மானிக்கப்படும் என்பதில் குழப்பம் ஏற்படும் என்பதே இதில் இருக்கும் பிரச்சனை என சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
6. விராட் கோலி முடிவு : இந்த உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக உலககோப்பை தொடங்குவதற்கு முன்பே விராட்கோலி அறிவித்திருந்தார் ஆனால் அது மிகவும் தவறானது என்றும் உலகக் கோப்பை முடிந்த பின்னர் இந்த முடிவை அறிவித்திருக்கலாம் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.
இது போன்ற ஒரு வேளையில் விராட் கோலிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இந்திய வீரர்களிடையே அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும் என அவர் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.