ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இங்கிலாந்து உட்பட மொத்தம் உலகின் 16 முக்கியமான அணிகள் பங்குபற்றுகின்றன.
Photo : Getty Images |
மிரட்டுமா இங்கிலாந்து:
இந்த உலக கோப்பையில் இயன் மோர்கன் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அந்த அணியில் முக்கிய முதுகெலும்பு வீரரான பென் ஸ்டோக்ஸ் தனது மன நலத்தை காக்கும் வகையில் இந்த உலக கோப்பையில் இருந்து விலகினார்.
அதேபோல் மற்றொரு நட்சத்திர இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்த டி20 உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார், மேலும் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனும் இந்த உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகினார்
இவர்களுக்கு பதிலாக லியம் லிவிங்ஸ்டன், டாம் கரன் மற்றும் டைமல் மில்ஸ் ஆகிய மூவர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர், இருந்தாலும் இந்த 3 முக்கியமான வீரர்கள் இல்லாத காரணத்தால் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து எதிரணிகளை திணறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பயந்து நடுங்க போறாங்க:
இந்நிலையில் 2021 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தை நினைத்து எதிரணிகள் பயந்துபோய் தூக்கம் இல்லாமல் தவிக்க போவதாக ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். இதுபற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் அவர்,
"நாங்கள் கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறோம், எந்த ஒரு இடத்திலும் எதிரணிகளை பந்தாட கூடிய தரமான வீரர்கள் எங்கள் அணியில் உள்ளார்கள் என்பதால் எங்களை முதலில் எதிர்கொள்ளுங்கள். நான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லை என்றாலும் எங்கள் அணி அதிரடியாக விளையாடி வருவதால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை".
"நாங்கள் இருவரும் அணியில் இல்லாவிட்டாலும் கூட அதை சமாளிக்கும் அளவுக்கு எங்கள் அணியில் நிறைய தரமான வீரர்கள் உள்ளார்கள், அடுத்த சில வாரங்களில் எதிரணிகள் எங்களை உலகக்கப்பையில் சந்திக்க வரும்போது பயத்துடன் வருவார்கள் என நம்புகிறேன், "கடவுளே நாளைக்கு மிகவும் கடினமாக போட்டி உள்ளதே" என முதல் நாள் ராத்திரியே எதிரணிகள் எங்களை நினைத்து தூக்கம் இல்லாமல் தவிப்பாரகள் என நம்புகிறேன்"
என கூறிய ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் தங்கள் அணி எதிரிகளைப் பந்தாடி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறுவது போல ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, மோர்கன் என பல நட்சத்திர அதிரடி வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணி ஐசிசி 2021 டி20 உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை வரும் அக்டோபர் 23ஆம் தேதி துபாயில் எதிர்கொள்ள உள்ளது.
இந்த உலக கோப்பையில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்தும் குரூப் 2 பிரிவில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதால் லீக் சுற்றில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.