ஐசிசி டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்க உள்ளது, வரலாற்றின் இந்த 7வது டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் உட்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன.
Virat Kohli (Photo : ICC) |
இதில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 2வது பிரிவில் இடம் பிடித்துள்ளது, இதையடுத்து இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்ள உள்ளது.
கிங் விராட் கோலி:
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வழக்கம்போல இந்தியாவின் ரன் மெஷின் மற்றும் கேப்டன் விராட் கோலி மீது இந்திய ரசிகர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில்
- சமீபத்தில் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 10000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சரித்திரத்தை விராட் கோலி படைத்தார்.
- கடந்த 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைகளில் இந்தியாவிற்காக பட்டையை கிளப்பிய அவர் அந்த 2 உலகக் கோப்பைகளின் தொடர் நாயகன் விருதுகளை அடுத்தடுத்து வென்று அசத்தி காட்டினார்.
Virat Kohli (photo : Getty Images) |
இருப்பினும் கூட அந்த 2 உலக போட்டிகளிலும் இந்தியா முறையே இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராகவும் அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் தோற்றது இந்திய ரசிகர்களுக்கு இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
சரி டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் 3 சிறந்த இன்னிங்ஸ் பற்றி பார்ப்போம்:
1. 82* ரன்கள், மொஹாலி, 2016:
சொந்த மண்ணில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றில் விளையாடிய இந்தியா மொஹாலியில் நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என தடுமாறியது, அந்த நிலையில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 82* ரன்கள் எடுத்து கேப்டன் தோனியுடன் சேர்ந்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியின் வாயிலாக இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அசத்தியது.
- அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி தனது வாழ்நாளில் இந்தியாவிற்காக விளையாடிய மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் இதுதான் என அதன்பின் பலமுறை கூறியுள்ளார்.
- மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த தருணமாக இந்த இன்னிங்ஸ்சை சமீபத்தில் ஐசிசி நடத்திய வாக்குப்பதிவில் தேர்வு செய்யப்பட்டது.
2. 72* ரன்கள், டாக்கா.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2014 டி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா எதிர் கொண்டது.
இப்போட்டியில் 171 என்ற இலக்கை துரத்திய இந்தியா 77/2 என இருந்த வேளையில் விராட் கோலி மீண்டும் அபாரமாக விளையாடி 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 மெகா சிக்சர் உட்பட 72* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்தியாவை வெற்றி பெறச் செய்தார், இதன் வாயிலாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
- அப்போட்டியை பினிஷ் செய்யும் வாய்ப்பு கேப்டன் டோனிக்கு கிடைத்த போதிலும் வெற்றிக்கு விராட் கோலி தான் வித்திட்டார் என்ற காரணத்தால் 19வது ஓவரின் கடைசி பந்தை வேண்டுமென்றே தடுத்து அடுத்த ஓவரில் விராட் கோலியை பினிஷிங் செய்ய வைத்து அழகு பார்த்த விதம் இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒன்றாகும்.
3. 78* ரன்கள், கொழும்பு, 2012.
இலங்கையில் நடைபெற்ற 2012 டி20 உலகக் கோப்பையின் 20 ஆவது லீக் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை இந்தியா எதிர் கொண்டது, இந்த முறை பந்துவீச்சில் அசத்திய இந்தியா பாகிஸ்தானை வெறும் 128 ரன்களுக்குள் சுருட்டியது.
பின்னர் 129 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கௌதம் கம்பீர் டக் அவுட், வீரேந்திர சேவாக் 29 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்கள், ஆனாலும் அதற்காக அசராத விராட் கோலி அடுத்ததாக களமிறங்கி 61 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 78* ரன்கள் எடுத்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தார்.
- இந்த 3 இன்னிங்சிலும் விராட் கோலி அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவை வெற்றி பெறச் செய்ததால் தான் அவரை சேஸ் மாஸ்டர் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அழைக்கிறார்கள்.
இதே போல மேலும் சில இன்னிங்ஸ்களை இந்த 2021 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம் ஆகும்.
Search Tags : Great T20 Innings By Virat Kohli, Virat Kohli T20 World Cup Best Innings, Virat Kohli 82* vs Australia 2016, Virat Kohli.