ஐசிசி டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது, இத்தொடரின் குரூப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 போட்டிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Virat Kohli (Photo : Getty Images) |
இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் சந்திக்க உள்ளது.
கடைசி முறையாக கேப்டன் விராட் கோலி :
இந்த உலக கோப்பையுடன் இந்தியாவின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே தற்போதைய கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார்.
கடந்த 2017 முதல் 20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி தற்போதுதான் முதல் முறையாக டி20 உலகக்கோப்பைக்கு கேப்டன்ஷிப் செய்ய உள்ளார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதுவே அவரின் கடைசி வாய்ப்பாகவும் உள்ளது.
2017, 2019, 2021 ஆகிய அடுத்தடுத்த 3 உலகக் கோப்பைகளில் அவர் கேப்டன்ஷிப் செய்தபோதும் இந்தியா ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை, இதனால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான அவர் சமீப காலங்களாக பேட்டிங்கிலும் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார்.
எனவே பணிச்சுமை மற்றும் கேப்டன்ஷிப் மீதான விமர்சனங்கள் காரணமாக விராட் கோலி டி20 கேப்டன் பதவிக்கு இந்த உலகக் கோப்பையுடன் முழுக்கு போட உள்ளார், ஐபிஎல் தொடரிலும் கூட அவர் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார்.
தகுதியான கைகள்:
கடந்த 2017 முதல் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி ஒரு கேப்டனாகவும் பேட்டராகவும் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியாவிற்காக கொடுத்துள்ளார் என்று கூறினால் மிகையாகாது.
பேட்டர் : ஒரு பேட்டராக இந்தியாவிற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை டி20 கிரிக்கெட்டில் 299, 211, 466, 295, 231* என 1500 க்கும் மேற்பட்ட ரன்களை மலை போல குவித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார்.
கேப்டனாக : ஒரு கேப்டனாக விராட் கோலி தலைமையில் இந்திய பங்கேற்ற 45* போட்டிகளில் 27 வெற்றிகளை 65.11 என்ற மிகச் சிறப்பான விகிதத்தில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 14 போட்டிகள் தோல்வியில் முடிந்தன, 2 போட்டிகள் டை ஆனது, 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
- அத்துடன் 2017 - 2021 வரையிலான காலகட்டங்களில் விராட் கோலி தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கிலாந்து ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டி20 தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
- இதன் வாயிலாக சேனா நாடுகள் எனப்படும் இந்த 4 வெளிநாடுகளில் ஒரு டி20 தொடரை வென்ற முதல் மற்றும் ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
உலககோப்பை நாயகன் :
டி20 உலக கோப்பையிலும் கூட 2012, 2014, 2016 ஆகிய 3 உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ள அவர் வெறும் 16 இன்னிங்சில் 777* இரங்கலை 86 என்ற அபாரமான சராசரி விகிதத்தில் குவித்து டி20 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
Photo Credits : Getty |
குறிப்பாக 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா எடுத்த 130 ரன்களில் விராட் கோலி மட்டும் 77 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக பேட்டிங்கில் தனி ஒருவனாக போராடினார், அதேபோல் 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 89* ரன்கள் குவித்தார்.
- இதன் காரணமாக 2014, 2016 ஆகிய உலககோப்பைகளின் தொடர் நாயகன் விருதுகளை அடுத்தடுத்து வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
- டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை அவர் வென்ற இந்திய வீரராகவும் சாதித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனம்:
இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 2012, 2014, 2016 ஆகிய டி20 உலகக் கோப்பைகளில் விராட் கோலி பங்கேற்ற 3 போட்டிகளில் முறையே 78*, 36*, 55* என 169 க்கும் ரன்களை விளாசி 3 முறையும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
- இன்னும் சொல்லப்போனால் டி20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானால் விராட் கோலியை இதுவரை அவுட் செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியம் ஆகும்.
ஆனால் இந்தியாவிற்காக தன்னால் முடிந்த இத்தனை விஷயங்களையும் செய்தும் கூட விராட் கோலி இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது வேதனையான ஒன்றாகும், இருப்பினும் மேற்கூறிய புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது அவரின் கை டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டு எந்துவதற்கு தகுதியானது என தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்தியாவிற்காக கடந்த 4 வருடங்களாக கேப்டன்ஷிப் செய்துவரும் விராட் கோலி இம்முறையாவது டி20 உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம் ஆகும்.
முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கூட "டி20 உலகக் கோப்பையை விராட் கோலிக்காக வென்று கொடுங்கள்" என்று இந்திய அணியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.