ஐபிஎல் 2021 தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Photo By BCCI/IPL |
ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் இந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் இருக்கும் பல திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டி இந்திய அணிக்காக விளையாட வைக்கும் நோக்கிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
அந்த நோக்கம் இந்த வருடம் மிகவும் அருமையாக நிறைவேறி உள்ளது என்றே கூறலாம் ஏனெனில் இந்த வருடம் விளையாடும் அனைத்து அணிகளிலும் பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவிற்காக விளையாடாத வீரர்கள் இந்த வருடம் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இந்தியாவுக்காக விளையாடாத 6 இளம் இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:
1. ஹர்சல் படேல்: விராட்கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் வகிக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சல் படேல் ஐபிஎல் 2021 தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.
- இதுவரை 14 போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவிற்காக விளையாடாத வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
- ஹர்சல் படேல் - 30* விக்கெட்கள் (2021).
- ஜஸ்பிரித் பும்ரா - 26 விக்கெட்கள் (2013).
அத்துடன் மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக மிகவும் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் மற்றும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற அபார சாதனையும் படைத்துள்ளார்.
2. அவேஷ் கான்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபாடா,நோர்ட்ஜெ ஆகியோருக்கு இணையாக இளம் இந்திய வீரர் அவேஷ் கான் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
- இதுவரை 14 போட்டிகளில் 22* விக்கெட்டுகள் எடுத்துள்ள இவர் இந்த வருடம் ஐபிஎல் 2021 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் ஆவார்.
3. வெங்கடேஷ் ஐயர்: ஐபிஎல் 2021 தொடரின் முதல் பகுதியில் சொதப்பிய கொல்கத்தா துபாயில் நடைபெற்ற 2வது பகுதியில் அபாரமாக செயல்பட்டு பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதற்கு முக்கிய காரணம் 2வது பகுதியில் அந்த அணிக்காக களம் இறங்கிய இளம் இந்திய வீரர் வெங்கடேஷ் அய்யர் என்றே கூறலாம்.
- முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ரசிகரான இவர் இந்த வருடம் பங்கேற்ற 7 ஐபிஎல் போட்டிகளில் 239 ரன்கள் 7 விக்கெட்டுகளை சாய்த்து ஒரு ஆல்-ரவுண்டராக ஜொலித்த வருகிறார்.
4. அர்ஷிதீப் சிங்: பஞ்சாப் அணிக்காக கடந்த வருடம் முதல் அபாரமாக விளையாடி வரும் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் இந்த வருடம் பங்கேற்ற 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை சாய்த்து அந்த அணியின் பந்துவீச்சில் முக்கிய வீரராக வலம் வந்தார்.
இந்திய அணியில் நிலவும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறையை இவர் விரைவில் நிரப்புவார் என நம்பலாம்.
5. ரவி பிஸ்னோய் : பஞ்சாப் அணியில் விளையாடிய சுழல் பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் இந்த வருடம் பங்கேற்ற 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 6.34 என்ற அபார எகனாமி விகிதத்தில் வீழ்த்தி அசத்தினார்.
- இவருக்கு மட்டும் 14 போட்டிகளிலும் பஞ்சாப் வாய்ப்பளித்து இருந்தால் கண்டிப்பாக அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
6. கேஎஸ் பரத் : இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடி வரும் ஸ்ரீகர் பரத் இந்த வருடம் வெறும் 6 இன்னிங்சில் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெற்றார்.
- அதில் 182 ரன்களை 45.50 என்ற சிறப்பான சராசரியில் 130 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குறித்து அனைவரின் கவனம் எடுத்துள்ளார், குறிப்பாக வலுவான டெல்லிக்கு எதிராக நடைபெற்ற பெங்களூருவின் கடைசி லீக் போட்டியில் கடைசி பந்தில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார்.