ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியுள்ளது, அக்டோபர் 17ம் தேதி துவங்கிய இந்த தொடரில் 16 அணிகள் பங்குபறும் 45 போட்டிகள் வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Photo Credits : Getty |
இந்த உலக கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்ள உள்ளது.
சரவெடி டி20 உலககோப்பை:
டி20 கிரிக்கெட் என்றாலே பவுலர்களை பந்தாடும் பேட்டர்கள் சிக்சர் மழை பொழிந்து ரன்களை குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கோப்பையை முன்னிட்டு வரலாற்றில் கடந்த 2007 முதல் இதுவரை 6 முறை நடைபெற்றுள்ள 20 ஓவர் உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்டர்கள் பற்றி பார்ப்போம்:
5. ஏபி டீ வில்லியர்ஸ் - தென்ஆப்பிரிக்கா:
எந்த வகையான கடினமான நேரத்திலும் எப்பேர்பட்ட தரமான பவுலர் எப்படி பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் எந்த ஒரு மூலைக்கும் பறக்கவிடும் வல்லவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ்.
ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போதிலும் டி20 உலகக் கோப்பைகளில் 2007 - 2016 வரையிலான காலகட்டங்களில்
30 போட்டிகளில் பங்கேற்று 717 ரன்களை 143 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி இந்த பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறார்.
- இவற்றில் 51 பவுண்டரிகளும் 30 சிக்ஸர்களும் மற்றும் 5 அரை சதங்களும் அடங்கும்.
அதிகபட்ச ஸ்கோர் 79 ஆகும்.
4. விராட் கோலி - இந்தியா :
சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி 2012, 2014, 2016 ஆகிய 3 உலகக் கோப்பைகளில் மட்டுமே இதுவரை பங்கேற்றுள்ளார்.
ஆனால் இந்த 3 உலகக் கோப்பைகளில் வெறும் 16 போட்டிகளில் 777 ரன்களை 86 என்ற மலைக்க வைக்கும் சராசரி விகிதத்தில் 136 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து இப்பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.
- அதிகபட்ச ஸ்கோர் - 89* ஆகும்.
இதுவரை அவர் டி20 உலக கோப்பையில் சதம் அடிக்கவில்லை என்றாலும் 9 முக்கியமான அரை சதங்களை அடித்துள்ளார்.
Photo Credits : Getty |
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியா எடுத்த 130 ரன்களில் விராட் கோலி மட்டும் தனி ஒருவனாக 77 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார், அதே போல் 2016 ஆம் ஆண்டு இந்திய வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 89* ரன்கள் குவித்து மீண்டும் வெற்றிக்காக போராடினார்.
- இதன் காரணமாக 2014 மற்றும் 2016 ஆகிய உலக கோப்பைகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனையும் படைத்துள்ளார்.
- மேலும் டி20 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இருப்பினும் இதுவரை இந்த உலக கோப்பையை வெல்ல முடியாத அவர் இந்த வருடம் முதல் மற்றும் கடைசி முறையாக இந்தியாவிற்காக டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் செய்ய உள்ளார், அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகும்.
3. திலக ரத்னே தில்சன் - இலங்கை:
இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் திலகரத்னே தில்ஷன் டி20 உலகக் கோப்பைகளில் 35 போட்டிகளில் பங்கேற்று 897 ரன்கள் குவித்து பட்டியலில் 3ம் இடம் பிடிக்கிறார்.
2007 - 2016 வரையிலான உலக கோப்பைகளில் பங்கேற்ற அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் 6 அரை சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 101 பவுண்டரிகளையும் 25 சிக்சர்களையும் பறக்க விட்டுள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர் 96* ஆகும்.
2. கிறிஸ் கெயில் - வெஸ்ட்இண்டீஸ் :
"பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல" என்பது போல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15000 ரன்கள் உட்பட ஏராளமான உலக சாதனைகளை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 உலகக் கோப்பைகளில் 28 போட்டிகளில் பங்கேற்று 920 ரன்களை 40 என்ற சிறப்பான சராசரியில் 146 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- அதிகபட்ச ஸ்கோர் : 117 ஆகும்.
குறிப்பாக கடந்த 2007ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 48 பந்துகளில் சதம் அடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
அதேபோல் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் பறக்கவிட்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
- கிறிஸ் கெயில் - 60 சிக்சர்கள்.
- யுவராஜ் சிங் - 33 சிக்சர்கள்.
2007 - 2016 வரை அனைத்து உலக கோப்பைகளிலும் பங்கேற்றுள்ள அவர் இந்த வருடமும் தனது 42வது வயதில் களமிறங்க உள்ளார். இந்த உலக கோப்பையில் அவர் இன்னும் 97 ரன்கள் எடுத்தால் முதலிடத்தில் இருக்கும் மகிளா ஜெயவர்தனேவை தாண்டி மற்றொரு உலக சாதனை படைப்பார்.
1. மகிளா ஜெயவர்தானே - இலங்கை:
இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்த்தன 2007 முதல் 2014 வரை பங்கேற்ற 31 டி20 போட்டிகளில் 1016 ரன்களை 39 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்துள்ளார்.
- இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் இவர் 6 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் பதிவு செய்துள்ளார், அத்துடன் 111 பவுண்டரிகளையும் 25 சிக்சர்களையும் பறக்க விட்டுள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர் : 100* ஆகும்.