T20 World Cup 2021: புதிய விதிமுறைகள் மற்றும் பரிசு தொகை விவரம் அறிவிப்பு

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடர் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது, இந்த தொடரில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.

Photo By ICC


இந்த உலக கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் சந்திக்க உள்ளது.

பரிசுத்தொகை விவரம்:

இந்நிலையில் இந்த தொடருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பற்றிய முழு விவரத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

வின்னர் : இந்த அறிவிப்பின் படி 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ரன்னர் : இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி பெற்று 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

அரைஇறுதி : இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்று வரை முன்னேறி தோல்வி பெற்று 3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 12 சுற்று :

இந்த உலக கோப்பையின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றில் இடம் பிடித்துள்ள 12 அணிகளும் இந்த சூப்பர் 12 சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 30 லட்சம் ரூபாய் போனஸ் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

  • இந்த சூப்பர் 12 சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் ஏற்கனவே இடம் பிடித்துள்ளன, எஞ்சிய 4 அணிகள் தகுதி சுற்று வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.

இது மட்டுமல்லாமல் சூப்பர் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 52.59 லட்சம் ஆறுதல் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

முதல் சுற்று: அதே போல முதல் சுற்றில் பங்கேற்கும் அணிகள் அந்த சுற்றில் பதிவு செய்யும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 30 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த சுற்றில் இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

புதிய நடைமுறை:

இந்த வருடம் டி20 உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்கும் 2 இடைவெளிகள் அளிக்கப்படும், அதாவது ஒரு ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி 10 ஓவர் பேட்டிங் செய்த பின்னர் ஒரு இடைவெளி வழங்கப்படும் பின்னர் சேசிங் செய்யும் போது 10 ஓவர்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஒரு இடைவெளி வழங்கப்படும், ஒவ்வொரு இடைவெளியும் 2 நிமிடம் மற்றும் 30 நொடிகள் கொண்டதாகும்.

  • அத்துடன் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அம்பயர் தீர்ப்பை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் நடைமுறை இந்த உலக கோப்பையில் அமல்படுத்தப்படுகிறது, கடைசியாக நடந்த 2016 டி20 உலக கோப்பையில் இந்த நடைமுறை இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டக்வர்த் லெவிஸ்:

அதேபோல் இந்த உலக கோப்பையின் குரூப் சுற்று போட்டிகளில் மழை குறுக்கிடும் பட்சத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியாளரை தீர்மானிக்க ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் விளையாடி இருக்க வேண்டும்.

அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மழை குறுக்கிடும் பட்சத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியாளரை தீர்மானிக்கும் இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடி இருக்க வேண்டும் என்ற புதிய விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Your Reaction