பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது.
Team India (Photo : BCCI) |
இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் ரோகித் சர்மா டக் அவுட், கே எல் ராகுல் 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து இந்தியாவை காப்பாற்ற போராடிய கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 58 ரன்களும் ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் இந்தியா வெறும் 151/7 ரன்கள் மட்டுமே எடுத்து ஓரளவு தப்பித்தது.
பாகிஸ்தான் வெற்றி:
பின்னர் 152 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 79* ரன்கள் மற்றும் கேப்டன் பாபர் அசாம் 68* ரன்கள் இணைந்து ஆரம்பம் முதலே சரவெடியாக பேட்டிங் செய்து ஒரு விக்கெட் கூட இழக்கவிடாமல் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.
- இந்த வெற்றியின் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் 5 தொடர் தோல்விகளுக்குப் பின்னர் 6வது முயற்சியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக சரித்திர வெற்றியை பதிவு செய்தது.
- அத்துடன் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் 12 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக இந்தியாவை ஒரு போட்டியில் வீழ்த்திய பாகிஸ்தான் தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதியது.
தோல்வியின் காரணங்கள்:
இந்த போட்டியில் இந்தியா வரலாற்று தோல்வியை பெறுவதற்கு பங்காற்றிய சில முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம்:
1. டாஸ் தோல்வி : நேற்றைய போட்டியில் டாஸ் தோற்ற போதே இந்தியாவின் தோல்வி ஏறத்தாழ உறுதியானது.
- ஏனெனில் சமீபத்தில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 12 ஐபிஎல் போட்டிகளில் 9 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன, வெறும் 3 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றன.
மேலும் ஆசிய கண்டத்தில் இரவுநேர போட்டிகளில் பனியின் தாக்கம் எப்போதுமே இருக்கும், அது நேற்றைய போட்டியிலும் இந்தியாவிற்கு எதிராக அமைந்தது. பணி மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக இந்திய பவுலர்கள் சரியாக பந்தை பிடித்து சரியான இடத்தில் போட முடியாமல் போனது பெரிய பின்னடைவை கொடுத்தது தோல்வியை பரிசளித்தது.
2. ரோஹித் - ராகுல் ஏமாற்றம்: டாஸ் தோற்று விட்டோம் எப்படியாவது இந்தியாவிற்கு ஒரு நல்ல தொடக்கத்தை அடித்தளம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து பாகிஸ்தானின் அபாரமான ஸ்விங் பந்துகளில் அவுட்டாகி இந்தியாவிற்கு ஏமாற்றம் அளித்தனர்.
- இருப்பினும் நேற்றைய முந்தைய நாளில் அதே துபாய் பிட்சில் வெஸ்ட் இண்டீஸ் 55 ரன்களுக்கு சுருண்ட வேளையில் இந்தியா போராடி 151/7 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயமாகும்.
ஆனால் தொடக்க வீரர்கள் ஒரு 20 - 30 ரன்கள் அடித்து கொடுத்திருந்தால் இந்தியாவால் 180 ரன்களை எடுத்து வெற்றிக்காக இன்னும் சற்று அதிகமாக போராடியிருக்க முடியும்.
3. பவுலிங் படு மோசம்: பேட்டிங்கில் தட்டுத்தடுமாறி 151 ரன்கள் எடுத்த இந்தியாவிற்கு பந்துவீச்சாளர்கள் சுத்தமாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.
152 ரன்கள் என்பது ஓரளவு நல்ல டார்கெட்டை டிபன்ட் செய்த இந்தியாவிற்கு பவுலர்கள் பவர் பிளே அல்லது முதல் 10 ஓவர்களில் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் இறுதிவரை ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அளவுக்கு நேற்றைய போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது.
Photo Credits : Getty Images |
செய்யவேண்டியவை :
விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு அழகு என்பது போல் இந்தப் போட்டியில் இந்தியா கற்ற பாடங்களையும் அடுத்த போட்டியில் வெற்றிக்காக செய்யவேண்டியவை பற்றி பார்ப்போம்:
1. புவனேஸ்வர் குமார் :
கடந்த சில வருடங்களுக்கு முன்பு துள்ளிய பந்துவீச்சுக்கு பெயர்போன பந்து வீச்சாளராக வலம் வந்த இந்தியாவின் புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து குணம் அடைந்த பின்னர் பழைய புவனேஸ்வர் குமாராக இல்லை என்பதே உண்மை.
ஐபிஎல் 2021 தொடரில் கூட அவர் 11 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளது சமீபகாலமாக அவர் நல்ல பார்மில் இல்லை என்பது தெளிவாக காட்டுகிறது, அந்த வேளையில் அவரை எதற்காக நேற்றைய போட்டியில் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.
ஷார்துல் தாகூர்:
எனவே அவருக்கு பதில் மற்றொரு ஆல்-ரவுண்டராக வலம் வரும் ஷர்துல் தாகூரை அடுத்த போட்டியில் இந்தியா கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவிற்காக அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பந்துவீச்சில் ஒரு சில நேரங்களில் ரன்களை வழங்கினாலும் கூட முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுப்பதையும் சமீப காலங்களாக நாம் பார்த்துள்ளோம், பேட்டிங்கிலும் ஓரளவு கணிசமான ரன்களை அடிக்க கூடியவராக அவர் இருக்கிறார்.
மேலும் ஐபிஎல் 2021 தொடரில் இவர் 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2. ஹர்டிக் பாண்டியா :
ஆல் ரவுண்டராக அணியில் இடம் பிடித்திருக்கும் ஹர்திக் பாண்டியா காயத்திற்கு பின் சமீப காலங்களாக பந்து வீசுவதை நிறுத்திவிட்டார், குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் சுத்தமாக பந்து வீசவில்லை.
நேற்றைய போட்டியில் கூட இவர் பந்து வீச காரணத்தால் முன்னணி 5 பவுலர்கள் தடுமாறிய வேளையில் 6வது பந்து வீச்சாளரை பயன்படுத்த முடியாத நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இது பற்றி நேற்றைய போட்டியில் எப்போது நீங்கள் உலக கோப்பையில் பந்துவீசுவீர்கள் என்று கேட்டபோது "நான் டி20 உலகக் கோப்பை 2021 தொடரின் பிற்பகுதியில் பந்துவீச விரும்புகிறேன்" என கூறினார்.
நேற்றைய போட்டியின் போது கூட லேசான காயத்தால் 2வது இன்னிங்சில் அவர் பீல்டிங் செய்யவில்லை, எனவே ஒன்று அவர் இனி வரும் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் செய்ய வேண்டும்.
அல்லது அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இறுதிக்கட்ட நேரத்தில் ஒரளவு பேட்டிங் செய்ய கூடிய யாரையாவது சேர்க்க வேண்டும்.
மொத்தத்தில் அடுத்த போட்டியில் பாகிஸ்தானை விட மிகவும் வலுவான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை சந்திப்பதற்கு முன் இருக்கும் ஒரு சில குறைகளை இந்தியா சரி செய்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.