IPL 2021: குவாலிபயர் 1 உறுதி, SRH க்கு நன்றி கூறும் சென்னை ரசிகர்கள்

ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

Kane williamson Ms dhoni
Kane Williamson | MS Dhoni (Photo : BCCI/IPL)


இந்த வருடத்தின் பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முதல் 3 அணிகளாக ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.

தடுமாறும் சென்னை:

இந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது அசத்தியது.

  • குறிப்பாக 2020 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அந்த அணி முதல் ஆளாக வெளியேறிய நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து இந்த வருடம் அதே வீரர்களை வைத்து கொண்டு முதல் அணியாக தகுதி பெற்றது உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.

இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அடுத்த 3 போட்டிகளில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளுடன் சென்னை தனது லீக் சுற்றை முடித்துள்ளது.

சொதப்பும் தோனி:

இப்படி முக்கியமான பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து உள்ளதால் அந்த அணி ரசிகர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மிடில் ஆர்டரில் அந்த அணியின் கேப்டன் டோனி, ரெய்னா போன்ற முக்கிய வீரர்களின் மோசமான ஆட்டம் சென்னைக்கு பெருத்த பின்னடைவை கொடுக்கிறது.

  • மொத்தத்தில் அந்த அணி இந்த வருடம் பங்கேற்ற 14 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் 5 புள்ளிகளுடன் 18 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.

குவாலிபயர் 1 இடம்:

இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிப்பது அந்த அணிக்கு பெரிய கேள்விக் குறியாகியுள்ளது, ஒருவேளை இன்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்காமல் இருந்திருந்தால் எந்தவித பிரச்சனையுமின்றி முதலிரண்டு இடங்களுக்குள் லீக் சுற்றை முடித்து இருக்கலாம்.

ஏனெனில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் ஒன்று போட்டிக்கு தகுதி பெறும் என உங்களுக்கே தெரியும்.

Photo By BCCI/IPL


அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும், மேலும் தோல்வி பெறும் அணி எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு எக்ஸ்ட்ராவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதே குவாலிபயர் 1 போட்டியின் சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே 13 போட்டிகளில் 10 வெற்றிகளை குவித்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிபயர் ஒன்று போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டது.

போட்டிக்கு பெங்களூரு:

தற்போதய நிலைமையில் முதலிடத்தை டெல்லி பிடித்துவிட்டதால் 2வது இடத்தை பிடிப்பதற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் பெங்களூரு அணிக்கு இன்னும் 1 லீக் போட்டி மீதமுள்ள நிலையில் கடைசி போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றால் சென்னை தற்போது வைத்துள்ள அதே 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடிக்க முடியும்.

கை கொடுத்த ஹைதெராபாத்:

இருப்பினும் நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் பெங்களூருவை ஹைதராபாத் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்கடித்தது.

இதனால் 2வது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பெங்களூருவுக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகிவிட்டது

தற்போது 2வது இடத்தை பெங்களூரு பிடிக்க வேண்டுமெனில் நாளை டெல்லி அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்து பின்பு 163 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும்.

  • ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக மும்பை 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்து வருகிறது.

எனவே பெங்களூரு தனது கடைசி போட்டியில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது அசாத்தியமாகும்.

மொத்தத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் நாளை பெங்களூர் வெற்றி பெற்று சென்னை வைத்திருக்கும் அதே 18 புள்ளிகளை தொட்டாலும் கூட அந்த அணியால் ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும்.

  • இவை அனைத்துக்கும் காரணம் சென்னை + 0.455 என்ற ரன் ரேட்டையும் பெங்களூரு - 0.159 என்ற குறைவான ரன் ரேட்டை கொண்டுள்ளதே காரணமாகும்.

சென்னை ரசிகர்களின் நன்றி:

இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்டு முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறிய போதிலும் மறைமுகமாக சென்னைக்கு ஹைதராபாத் உதவியுள்ளது. 

இதனால் "ரொம்ப தேங்க்ஸ் தம்பி" என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post Next Post

Your Reaction