ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை 2021 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது, இதில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்ள இருக்கிறது.
Team India (Photo : Getty Images) |
ரவிச்சந்திரன் அஷ்வின்:
இந்த உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சோபிக்க தவறிய அவர் கடைசியாக வெஸ்ட் இண்டீசின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு போட்டியில் படுமோசமாக பந்து வீசிய காரணத்தால் அத்தோடு இந்திய வெள்ளை பந்து அணியிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
முடியாத கதை:
அதன் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வாய்ப்புக் கிடைத்த அவரின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவரும் எதிர்பார்த்தனர், இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாத அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தார்.
யூஸ்வென்ற சஹால், வாசிங்டன் சுந்தர் என பல புதிய பவுலர்களின் வருகையால் அஸ்வின் இனி இந்திய வெள்ளைப் அந்த அணியில் குறிப்பாக உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவது அசாத்தியமானதாக தோன்றியது, அந்த வேளையில் இங்கிலாந்து தொடரில் துரதிஸ்டவசமாக தமிழகத்தின் மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடையவே சஹாலையும் தாண்டி ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாய்ப்பின் காரணங்கள்:
இந்திய அணியில் ஆப் ஸ்பின் பவுலர்களுக்கு பஞ்சம் இருப்பதாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் வேறு வழியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது ஒரு காரணமாகும்.
அத்துடன் இந்த உலகக் கோப்பைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எம்எஸ் தோனியின் ஆதரவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வில் அதிகமாக பங்காற்றி இருக்கலாம்.
2017இல் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் அஸ்வின் இந்திய வெள்ளைப் அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார், தற்போது டி20 உலகக் கோப்பை அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2010இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல்மறையாக டி20 போட்டிகளில் களமிறங்கிய இவர் மொத்தம் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுக்களை 6.97 என்ற சிறப்பான எக்கனாமியில் 19.10 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
- அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் ஏற்கனவே படைத்துள்ளார்.
மோசம் இல்லயே:
இந்தியாவுக்காக இவர் விளையாடிய 46 போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாடியுள்ளார், எஞ்சிய 45 போட்டிகளில் எம்எஸ் தோனி தலைமையில் இவர் விளையாடி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கூட இவர் மொத்தம் 167 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை 6.91 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார், இந்த புள்ளி விவரங்களில் இருந்தே ஒரு சில மோசமான போட்டிகள் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டி20 அணியிலிருந்து வெளியே உட்கார வைக்கப்பட்டார் என்பது தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
உலககோப்பை நாயகன்:
- ஐசிசி டி20 உலகக் கோப்பைகளிலும் கூட அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இவர் 2012, 2014, 2016 ஆகிய 3 டி20 உலக கோப்பையில் பங்கேற்ற 15 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 6.18 என்ற சிறப்பான எகனாமி விகிதத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே ஜாம்பவானாக உருவெடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் அதற்கு தகுந்தார்போல் பந்துவீச தேவையான நுணுக்கங்களை தெரிந்தவர்.
இருந்தாலும் சில சமயங்களில் பேட்ஸ்மேன்கள் தனது பந்துகளை அடித்த விடக்கூடாது என்பதற்காக தனக்கு இயற்கையாக வரும் ஆப் ஸ்பின் பந்துகளை தவிர்த்து கேரம் பால் உட்பட பல்வேறு விதமான பந்துகளை அதிகமாக பயன்படுத்துவது அவருக்கு ஆபத்தில் முடிவடைவதை சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் பார்த்தோம், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்ற 13 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
வாய்ப்பு கிடைக்குமா :
ராகுல் சஹர், வருன் சக்ரவர்த்தி போன்ற இளம் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியாவின் முதல் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்.
ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மிகவும் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு அஷ்வின் உதவுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனெனில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 உலக கோப்பை பயிற்சி போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, அதில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2வது பயிற்சி போட்டியில் பவர் பிளேயில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏற்கனவே 3 டி20 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அஸ்வின் உலக கோப்பை தொடரில் போன்ற பல மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடிய திறமையையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார், எனவே அவரின் திறமை மற்றும் அனுபவத்தை நம்பி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வினுக்கு விராட் கோலி வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.