இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 2021 ஐசிசி டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது, கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவரின் பதவி கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைக்கு பின்பு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
Photo By BCCI |
அந்த 2 ஆண்டுகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருப்பதாக ரவி சாஸ்திரியும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார், இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐ பல யோசனைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்திய பயிற்சியாளர்:
இந்த பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு சில பயிற்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு ஒரு இந்தியர்தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும், அது தான் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்த வழிவகுக்கும் என பிசிசிஐ விரும்புகிறது.
அனில் கும்ப்ளே:
இதனால் ரவி சாஸ்திரிக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்த அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரில் யாரேனும் ஒருவராவது பயிற்சியாளராக நியமிக்கலாம் என பிசிசிஐ யோசித்து வந்தது, இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
இது மட்டுமல்லாமல் அவர் தலைமையில் கடந்த சில வருடங்களாகவே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் திணறுகிறது.
இதன் காரணமாக அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிக்கலாம் அல்லது பொறுத்திருந்து முடிவு செய்யலாம் என பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது.
ராகுல் டிராவிட்:
இந்நிலையில் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்தை 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் எதிர்கொள்கிற உள்ளது.
Photo By Getty |
பயிற்சியாளர் பதவி பற்றி யோசித்து ஒரு நல்ல திறமையானவரை அமர்த்த சிலகாலம் தேவைப்படுவதாக பிசிசிஐ நினைக்கிறது, எனவே வரும் நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த பதவியில் இருந்தால் நன்றாக இருக்கும் என உணர கூடிய ஒருவர் பயிற்சியாளர் பதவிக்கு வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த பதவிக்கு பொருத்தமில்லாத யாரிடமும் இருந்தும் விண்ணப்பங்களை பெறுவதற்கு நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் விருப்பமில்லை எனில் அது கிரிக்கெட் வாரியத்திற்கும் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்க உள்ளவருக்கும் நல்ல உணர்வை கொடுக்காது. எனவே பயிற்சியாளர் பதவிக்கு சரியான ஒருவரை தேர்வு செய்ய வேண்டும், அதுவரை ராகுல் டிராவிட் தற்காலிகமாக இந்தியாவின் இடைக்கால பயிற்சியாளராக இருப்பார்"
என பிசிசிஐ-க்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகிழ்வான செய்தி:
ஏற்கனவே அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளுக்காக பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் ராகுல் டிராவிட் பல தரமான இளம் இந்திய வீரர்களை உருவாக்கி வருகிறார். இதனால் பெரும்பாலான இந்திய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் அவர் இந்தியாவின் பயிற்சியாளராக வரவேண்டும் என வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.
கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார், எனவே கண்டிப்பாக நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில் அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.