வரலாறு படைத்த பாகிஸ்தான் : காற்றில் பறந்த இந்தியாவின் மானம், ஒன்றா - இரண்டா

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த குரூப்-2 சூப்பர் 12 போட்டியில் துபாயில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின, இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை போட்டி என்பதால் உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Pakistan Beats India in World Cup
Photo By Getty Images


மோசமான ஓப்பனிங்:

இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர அதிரடி வீரர் ரோஹித் சர்மாவை கோல்டன் டக் அவுட் செய்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி மறுபுறம் அபாரமான பார்மில் இருக்கும் கேஎல் ராகுலை 3 ரன்களில் அவுட் செய்து இந்தியாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி அளித்தார்.

அடுத்ததாக சூரியகுமர் யாதவ் 11 ரன்களில் நடையை கட்ட 31/3 என தடுமாறிய இந்தியாவை கேப்டன் விராட் கோலி அடுத்து வந்த ரிஷப் பண்ட் உடன் இணைந்து காப்பாற்ற போராடினார், 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.

காப்பாற்றிய விராட் கோலி :

மறுபுறம் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 57 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் 4வது அரை சதத்தையும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 10வது அரை சதத்தையும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 151/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அசத்திய அப்ரிடி 3 விக்கெட்டுகளும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

கதறவிட்ட பாகிஸ்தான்:

பின் 152 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானிற்கு தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இணைந்து தொடக்கம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை அதிரடியாக அடித்து விளையாடத் தொடங்கினர்.

Ind Vs Pak
Photo By Getty Images


ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கிய இவர்கள் நேரம் செல்ல செல்ல சரவெடியாக சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு இந்திய ரசிகர்களை கதற வைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் விராட் கோலி பயன்படுத்திய எந்த யுத்திகளும் கைகொடுக்கவில்லை குறிப்பாக ஜஸ்பிரிட் பும்ரா உட்பட எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளர்களும் இவர்களை கடைசிவரை பிரிக்கவே முடியவில்லை.

சரித்திர வெற்றி:

இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்த இந்த ஜோடியால் வெறும் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தான் சார்பில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 79* ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உட்பட 68* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிபெறச் செய்தனர்.

காற்றில் பறந்த மானம் :

நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அதிரடியாகவும் அபாரமாகவும் விளையாடிய பாகிஸ்தான் வெற்றிக்கு தகுதியான அணி என்று கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோற்றதன் வாயிலாக பல வருடங்களாக வைத்திருந்த சரித்திர பெருமைகளை நேற்று ஒரே இரவில் இழந்த இந்தியா காற்றில் பறக்கவிட்டது. அவையாவன:

1. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது.

  • கடந்த 2007 முதல் 2016 வரை இதற்குமுன் நடைபெற்ற 6 உலகக் கோப்பைகளில் 5 முறை பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அதில் வெற்றி பெற்று 5 - 0 என தோற்காமல் இருந்து வந்தது ஆனால் நேற்றைய போட்டியில் முதல் முறையாக தோற்று அந்தப் பெருமையை இந்தியா இழந்தது.

2. 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என ஐசிசியின் எந்த ஒரு உலக கோப்பையிலும் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்காமல் இருந்தது ஆனால் நேற்றைய போட்டியில் தோற்று வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது.

கடந்த 1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் அல்லது 20 ஓவர் என எந்த ஒரு வகையான உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 12 போட்டிகளில் பங்கேற்ற இந்தியா அந்த 12 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 - 0 என முன்னிலையில் இருந்தது ஆனால் நேற்றைய போட்டியில் தோற்றதன் வாயிலாக அந்த முக்கிய பெருமையை காற்றில் பறக்கவிட்டது.

3. நேற்றைய போட்டியில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

  • அதேபோல் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் பாகிஸ்தானிடம் நேற்று முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

தோற்கலாம் அதுக்குன்னு இப்படியா:

நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் படுமோசமாக சொதப்பிய இந்தியா கடைசிவரை ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திண்டாடியது.

குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முஹம்மது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தானின் சரித்திர வெற்றிக்கு வித்திட்டார்கள்.

1. இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த 2வது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் படைத்தது - 152 ரன்கள்.

2. டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஜோடி படைத்தது.

  • 152* ரன்கள், இந்தியாவுக்கு எதிராக, 2021.
  • இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் ஓப்பனிங் ஜோடி கிறிஸ் கெயில் மற்றும் டேவோன் ஸ்மித் 145 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.

3. அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஓபனிங் ஜோடி என்ற புதிய சாதனையையும் இந்த ஜோடி படைத்தது.

  • மேலும் உலகிலேயே டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஓபனிங் ஜோடி என்ற சாதனையையும் இந்த ஜோடி படைத்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது போட்டியில் வெற்றி தோல்வி சகஜம் ஆனால் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக அதுவும் இவ்வளவு மோசமாக தோற்கலாமா என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள்.

மனசை தேற்றிகொள்ள:

நேற்றைய போட்டியில் பவுலிங்கில் இந்தியா சொதப்பிய போதிலும் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 151 ரன்கள் எடுத்து ஓரளவு தப்பித்தது என்றே கூறலாம்.

ஏனெனில் நேற்று முன்தினம் இதே துபாய் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை சந்தித்தது, அந்த அளவுக்கு மோசமாக விளையாடாமல் 100 ரன்களுக்கு மேல் எடுத்தாவது இந்தியா தோற்றது என இந்திய ரசிகர்கள் தற்போதைக்கு மனதை தேற்றிக் கொள்ளலாம்.

Previous Post Next Post

Your Reaction