எல்லோரும் தோனியாக முடியாது, பொறுமை வேண்டும் - ரிஷப் பண்ட்டுக்கு நெஹ்ரா, சேவாக் ஆதரவு

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி லீக் அபாரமாக செயல்பட்டு 10 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

சிறப்பான பேட்டிங், பௌலிங் என லீக் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பின் குவாலிபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றது.

Rishab Pant and MS Dhoni
Photo : BCCI/IPL


இருப்பினும் குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் போராடி தோற்று முதல்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து மீண்டும் வெறுங்கயுடன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

காரணம் ரிஷப் பண்ட்:

லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட போதிலும் பிளே ஆப் சுற்றில் அடுத்தடுத்த 2 தோல்விகளை பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் வெளியேறுவதற்கு அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு காரணமாக இருக்கிறார் என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் சென்னை வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது, அந்த தருணத்தில் அந்தப் போட்டியில் அபாரமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்காவின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா அந்த கடைசி ஓவரை வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

தவறான முடிவு:

ஆனால் கேப்டன் பண்ட் இங்கிலாந்தைச் சேர்ந்த அனுபவமே இல்லாத டாம் கரனிடம் அந்த ஓவரை வழங்க அதில் பார்ம் இல்லாத எம்எஸ் தோனி கூட சிறப்பாக பேட்டிங் செய்து அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து சென்னையை வெற்றி பெறச் செய்தார்.

ஒருவேளை கடைசி ஓவரை ககிசோ ரபடா வீசி இருந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் என பல ஜாம்பவான்கள் கருதுகிறார்கள்.

பொறுமை வேண்டும்:

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த ரிஷப் பண்ட் கேப்டன்சி பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹரா கிரிக்பஸ் இணையதளத்தில் பேசுகையில்,

"அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு பண்ட்டை டெல்லி தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவர் அதிகமாக விளையாட விளையாட சிறப்பாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் டெல்லி அணிக்கு அது நல்லது. ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என பார்த்தால் ஒரு சில தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார். 2007இல் நேரடியாக அறைக்குள் வந்து கேப்டனாக டி20 உலகக் கோப்பையை வென்றது போல் அனைவரும் எம்எஸ் தோனி ஆகிவிட முடியாது, எனவே அவர் சற்று பொறுமையாக இருந்து முன்னேற வேண்டும்".

"அவரின் கேப்டன்ஷிப் பற்றி பார்க்கும் போது கடைசி 3 போட்டிகளில் விளிம்பு வரை சென்று டெல்லி தோற்றுப்போனது, இது போன்ற நூல் இழையிலான தோல்விகள் தான் உங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தரும், எனவே அடுத்த வருடம் டெல்லி அவரை தக்கவைத்து கேப்டனாக வாய்ப்பு வழங்கும் என நம்புகிறேன்"

என தெரிவித்த ஆஷிஷ் நெஹ்ரா பண்ட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.

Photo : BCCI/IPL


10 வருடம்:

ரிஷப் பண்ட் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்தது பற்றி இந்தியாவின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்,

"அடுத்த வருடம் மட்டுமல்லாது பெங்களூர் அணிக்காக 2008 முதல் விராட் கோலி விளையாடி வருவது போல் அடுத்த 10 வருடங்களுக்கு டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாட வேண்டும், இருப்பினும் கேப்டன்சி பற்றி அடுத்த வருடம் முடிவு செய்து கொள்ளலாம், கேப்டன்ஷிப் என்பது நீங்கள் எவ்வளவு விளையாடுகிறீர்களோ அந்த அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும், ரிஷப் பண்ட் பொருத்தவரை அவர் அனுபவம் இல்லாதவர் தவறு செய்தாலும் அதில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடியவர், அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக கற்றுக்கொண்டு முன்னேற்றம் அடைவார்".

என கூறிய விரேந்திர சேவாக் அடுத்த வருடம் மட்டுமல்லாது அடுத்த 10 வருடங்களுக்கு டெல்லி அணிக்காக பண்ட் தொடர்ந்து விளையாட வேண்டும் என ஆதரவு தெரிவித்தார்.

Previous Post Next Post

Your Reaction