இந்திய கிரிக்கெட்டில் ரன் மெஷினாக இருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின் அவரின் இடத்தை அப்படியே விராட் கோலி நிரப்பி வருகிறார், கடந்த 2014 முதல் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி 2017 முதல் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Sachin Tendulkar | Virat Kohli (Photo : Getty) |
அதிரடி கேப்டன்:
பொதுவாக கேப்டனாக பொறுப்பை ஏற்கும் வீரர்கள் அதன்பிறகு அழுத்தம் காரணமாக ரன்கள் குவிக்க தடுமாறுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் விராட் கோலி அந்த அழுத்தங்கள் எதுவும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார், சொல்லப்போனால் கடந்த நான்கைந்து வருடங்களில் அவர் இரட்டை மடங்கு ரன்களைக் குவித்து வருகிறார்.
- இதற்கு சான்றாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற உலக சாதனையை ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உடன் விராட் கோலி (41 சதங்கள்) பகிர்ந்து கொண்டுள்ளதே இதற்கு சான்றாகும்.
இதனாலேயே ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் விராட் கோலியை பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஒப்பிட்டு வருவது வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது. இதுவரை 70 சதங்களை அடித்து உள்ள அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் உலக சாதனையை தகர்த்தது புதிய உலக சாதனை படைப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பார்ம் அவுட்:
இருப்பினும் கடந்த 2019 அக்டோபருக்கு பின் பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி கடந்த 2 வருடங்களாக டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.
கேப்டனாக தொடர்ந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் செயல்பட்டு வருவதால் ரன்கள் குவிக்க முடியாமல் போகிறது என விராட் கோலி உணர்ந்துள்ள காரணத்தால் வரும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் இந்தியாவின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
நெருங்க முடியாது:
இந்த வேளையில் சச்சின் - விராட் கோலி ஒப்பீடு பற்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஆசிப் "கவர்டிரைவ்கிரிக்கெட்" யூடியூப் பக்கத்தில்,
"விராட் கோலி கீழ் கை (பாட்டம் ஹேண்ட்) வீரர், அவரின் சிறப்பான உடல்தகுதி காரணத்தினாலேயே சிறந்து விளங்குகிறார் அவரது உடலும் அதற்க்கு நல்ல உதவி அளிக்கிறது. தற்போது பார்ம் இன்றி சரிவில் இருக்கும் அவர் மீண்டு வருவார் என எனக்குத் தோன்றவில்லை. உண்மையில் பாபர் அசாம் சச்சின் டெண்டுல்கர் போல மேல் கை (அப்பர் ஹேண்ட்) வீரர், அவர் சச்சினை போல பேட்டிங் செய்கிறார். நிறைய பேர் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்தவர் என கூறுகிறார்கள் ஆனால் சச்சினை விராட் கோலி நெருங்கக் கட முடியாது என நான் கூறுகிறேன்"
என கூறிய முகமது ஆசிப் தற்போதைய நிலைமையில் பார்ம் இல்லாமல் தவிக்கும் விராட் கோலி அதிலிருந்து மீளவே முடியாது என்றும் அவரைப் போய் சச்சினுடன் ஒப்பிடலாமா சச்சினுக்கு அருகில் விராட் கோலியால் நெருங்கக்கூட முடியாது எனவும் தெரிவித்தார்.
Photo By Pakistan Cricket |
அத்துடன் விராட் கோலியை விட பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் தான் சச்சின் டெண்டுல்கர் போல விளையாடுகிறார் எனவும் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் எனவும் கூறினார்.
சச்சினுக்கு புகழாரம்:
"சச்சின் டெண்டுல்கர் தனது அப்பர் ஹேண்ட் பயன்படுத்தி விளையாடினார், பயிற்சியாளர் அல்லது எந்த ஒரு வீரராக இருந்தாலும் சரி அந்த நுணுக்கம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். புல், கட் மற்றும் கவர் டிரைவ் போன்ற ஷாட்களை அடிப்பதில் சச்சின் டெண்டுல்கர் வல்லவர். விராட் கோலியும் அதுபோன்ற ஷாட்டுகளை அடிப்பதில் சிறந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் அவர் பாட்டம் ஹேண்ட் வீரர்"
என சச்சின் பற்றி முகமது ஆசிப் புகழ்ந்து பேசினார்.
சமீப காலங்களாகவே கேப்டன்களாக இருக்கும் இந்தியாவின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரில் யார் சிறந்தவர் என்பது பற்றி இரு நாட்டு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வந்துகொண்டே இருக்கிறது, இதில் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என அந்நாட்டு ரசிகர்கள் கூறிவருகிறார்கள், அதேபோலவே முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.