என் கிரிக்கெட் வாழ்க்கை தமிழ் மண்ணில் தான் முடியும் - எம்எஸ் தோனி

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது, கடந்த 2020ஆம் ஆண்டு மோசமாக விளையாடிய அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பெருத்த அவமானத்தை சந்தித்தது.

MS Dhoni For Chennai Super Kings
MS Dhoni (Photo : BCCI/IPL)


இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து சென்னை இந்த வருடம் அபாரமாக செயல்பட்டு முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கெளரவம் பெறாத தோனி:

3 வகையான உலக கோப்பைகள் உட்பட ஏராளமான இனிய நினைவுகளை இந்திய ரசிகர்களுக்கு கொடுத்த நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிற்காக அவர் விளையாடி இருந்தார், அதன் பிறகு இந்திய அணியில் விலகி இருந்த அவர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வை அறிவித்து இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து மொத்தமாக விலகினார், இதன் காரணமாக ஒரு ஜாம்பவானான அவருக்கு ரசிகர்கள் முன்னிலையில் பேர்வெல் போட்டி வாயிலாக கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வாய்ப்பு கிடைக்காமலே போனது.

ஐபிஎல் தொடரில்:

இருப்பினும் ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார், இருந்த போதிலும் கடந்த 2020 முதல் பேட்டிங் செய்ய மிகவும் தடுமாறி வரும் அவர் பழைய தோனியாக காட்சி அளிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

குறிப்பாக 2020 ஐபிஎல் முதல் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை, அத்துடன் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஏற்கனவே 40 வயதை கடந்துள்ள அவர் அடுத்த வருடம் சென்னைக்காக விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழ் மண் தல தோனி:

இந்த வேளையில் சென்னை அணியின் நிர்வாகமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது வருட நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம்,

"அனைவரும் உங்களுக்கு எப்போது பேர்வெல் போட்டி நடைபெறும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஆகஸ்ட் 15, 2020இல் ஏன் திடீரென ஓய்வு பெற்றீர்கள் எதனால் அந்த குறிப்பிட்ட நேரத்தைத் தேர்வு செய்தீர்கள்"

என கேட்ட போது அதற்க்கு,

ஆகஸ்ட் 15 விட ஒரு மிகச் சிறந்த நாள் இருக்க முடியாது. பேர்வெல் போட்டி பற்றி கூற வேண்டுமானால் எப்போதும் நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது பார்ப்பீர்கள், அப்போதும் கூட எனக்கு சிறிதளவு ஃபேர்வெல் கொடுக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே நீங்கள் சென்னைக்கு வந்து அங்கே நான் கடைசியாக விளையாடும் போட்டியை பார்க்க முடியும் என நம்புகிறேன் மேலும் அங்கே தான் நான் அனைத்து ரசிகர்களையும் பார்க்க உள்ளேன்

என கூறிய தோனி எப்போது நடந்தாலும் தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி போட்டி தமிழகத்தின் சென்னையில் தான் நடைபெறும் எனவும் தமிழ் மண்ணில் தமிழ் ரசிகர்களுக்கு முன்னிலையில் மட்டுமே தாம் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Chennai Super Kings 2021
Chennai Super Kings (Photo : BCCI/IPL)


மேலும் சென்னை அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இருக்க "முடிவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதாகவும் இந்த அளவுக்கு சென்னை வெற்றி பெறுவதற்கு தாம் மட்டும் காரணமில்லை ஒட்டுமொத்த அணியும் காரணம்" என தோனி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

2வது வீடு சென்னை:

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணிக்காக கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி அவர்களின் அன்பைப் முழுமையாக பெற்றுள்ளார், இதன் காரணமாகத்தான் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை "தல" என்று மனதார அழைக்கிறார்கள், இதனாலேயே ராஞ்சிக்கு பிறகு சென்னை தான் தனது 2வது வீடு என அடிக்கடி கூறும் தோனி தமிழ் மண்ணிலேயே தனது கடைசி கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார் என எளிதாக புரிந்து கொள்ளலாம்.

2022இல் தோனி:

இதை அடுத்து அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் தோனி சென்னை அணிக்காக மீண்டும் ஒரு முறை பங்கேற்பார் என சென்னை ரசிகர்கள் கண்டிப்பாக நம்பலாம், 2022 மட்டுமல்லாமல் அடுத்த ஒரு சில ஆண்டுகள் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என ஏற்கனவே அந்த அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction