ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது, ஏற்கனவே கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியாக தன்னை முத்திரை படுத்தியுள்ளது.
Trophies Won By MS Dhoni (Source : Twitter) |
கேப்டன் தல தோனி:
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக பணிபுரிந்த எம்எஸ் தோனி கிரிக்கெட் மீதான ஈடுபாடு காரணமாக அந்த வேலையை கூட விட்டுவிட்டு முழு நேரமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார், பின்னர் எதிர்பாரா வண்ணம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு 2007இல் அவருக்கு கிடைக்க அப்போது முதல் தற்போது வரை கேப்டனாக அவர் வெற்றி பெறாத கிரிக்கெட் கோப்பைகளே கிடையாது என கூறலாம்.
சரி வரலாற்றில் எம்எஸ் தோனி கேப்டனாக இதுவரை வென்ற முக்கிய கோப்பைகளின் பட்டியல் பற்றி பார்ப்போம்:
ஐசிசி கோப்பைகள்:
1. டி20 உலககோப்பை - 2007:
தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடங்கும் போது எம்எஸ் தோனி எனும் உலகின் ஒரு தலை சிறந்த கேப்டன் இந்த உலகிற்கு வரப்போகிறார் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்திய ரசிகர்கள் கூட எதிர்பாராத அந்த தலைவன் எதிர்கொண்ட முதல் போட்டியே பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக தனது டை ஆனது, அப்போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்க வரலாற்றில் முதல்முறையாக கொண்டுவரப்பட்ட பால் அவுட் முறையில் பாகிஸ்தான் ஒருமுறை கூட ஸ்டம்பை அடிக்க முடியாமல் கோட்டை விட இந்திய பவுலர்கள் தொடர்ந்து 3 பந்துகளிலும் ஸ்டம்பை குறிபார்த்து அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
- இருப்பினும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்க்கு மிக தூரத்தில் நின்ற வேளையில் தோனி மட்டும் ஸ்டம்ப் பக்கத்திலேயே அமர்ந்தவாறு நின்ற விதம் இந்திய பவுலர்கள் குறிபார்த்து அடிக்க உதவியது.
இறுதி போட்டியிலும் கூட வெற்றி எதிரணியின் கைக்கு சென்ற போதும் யாரும் எதிர்பாரா வண்ணம் ஜோகிந்தர் சர்மாவை கடைசி ஓவரை வீச வைத்து இந்தியாவை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
மொத்தத்தில் இளம் வீரர்களை வைத்துக்கண்டு சாதித்துக் காட்டிய எம்எஸ் தோனி டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.
2. 50 ஓவர் உலககோப்பை :
1983க்கு பின் சச்சின், கங்குலி உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் உருவாகிய போதிலும் இந்தியா ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாமலேயே இருந்து வந்தது,
இம்முறை சச்சின், சேவாக் என அனுபவ வீரர்களை வைத்துக் கொண்டு களமிறங்கிய தோனி லீக் மற்றும் நாக்-அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் சோடை போனாலும் இதர வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
பின் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மாபெரும் இறுதிப்பட்டியில் ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்தியாவை யுவராஜ் சிங்கிற்கு முன்பாக களமிறங்கி கவுதம் கம்பீர் உடன் இணைந்து 91* ரன்கள் குவித்து இந்தியா 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை அதுவும் சொந்த மண்ணில் முத்தமிட முக்கிய பங்காற்றினார்.
- அதுவும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து போட்டியை பினிஷிங் செய்து உலக கோப்பையை வென்ற விதம் சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்றாகும்.
3. சாம்பியன்ஸ் கோப்பை:
சச்சின் போன்ற முக்கிய வீரர்களின் ஓய்வை அடுத்து 2013ஆம் ஆண்டு மீண்டும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இங்கிலாந்திற்கு சென்ற இந்தியா அங்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்றது.
அதுவரை திக்கு திசையின்றி மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் சர்மாவின் திறமையை அறிந்த தோனி அந்தத் தொடரில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களம் இறக்கினார், அப்போது விஸ்வரூபம் எடுத்த அவர் இப்போது "ஹிட்மேன்" என்ற பெயருடன் உலகின் முன்னணி ஓபனிங் பேட்ஸ்மேனாக வலம் வருவது வேறு கதை.
Photo By Getty Images |
வழக்கம் போல ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பல திறமையான வீரர்களின் அபாரமான பங்களிப்பால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் வெற்றியை மழை லேசாக சோதித்துப் பார்த்தது, இருப்பினும் இறுதிப்போட்டியில் தோனியின் கேப்டன்சிப் மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது என கூறலாம்.
ஆம் 2007இல் ஜோகிந்தர் சர்மா என்றால் 2013இல் இஷாந்த் சர்மாவை வைத்து இங்கிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த இயன் மோர்கன் மற்றும் ரவி போபரா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார்,இதன் காரணமாக இந்தியா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது.
இதை தொடர்ந்து வரலாற்றிலேயே 20 ஓவர், 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என 3 வகையான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சரித்திரத்தையும் படைத்தார்.
ஆசிய கோப்பைகள்:
2008 ஆசிய கோப்பை : இலங்கையில் கடந்த 2008இல் நடைபெற்ற 10வது ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான இந்தியா இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது.
2016 ஆசிய கோப்பை:
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
- இதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
ஐபிஎல் கோப்பைகள் :
2010 ஐபிஎல் கோப்பை:
2010 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்த சென்னை பின்னர் வெற்றிப் பாதையில் நடந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, இறுதியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
- 2010இல் சென்னை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எம்எஸ் தோனி 29 பந்துகளில் எடுத்த 54* ரன்கள் தான் முக்கியமான பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஐபிஎல் கோப்பை:
2011 உலக கோப்பையை வென்ற கையோடு நடைபெற்ற ஐபிஎல் தொடரையும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது முறையாக இந்த முறை தென்னாப்பிரிக்காவில் வென்று சாதனை படைத்தது.
2018 ஐபிஎல் கோப்பை:
2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது.
Photo By BCCI/IPL |
வயதான வீரர்களை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றுவிட முடியுமா என கேலி செய்த எதிரகளை வீழ்த்தி 3வது முறையாக தோனியின் சென்னை கோப்பையை வென்றது அந்த அணி ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாக செய்தது.
2021 ஐபிஎல் கோப்பை:
2020இல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் படுமசமான அவமானத்தைச் சந்தித்தது.
இருப்பினும் அதே வீரர்களை வைத்துக்கொண்டு அதே துபாய் மண்ணில் 2021 ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றி பெறுவதற்கு வயது ஒரு தடை அல்ல என மீண்டும் தோனி நிரூபித்தார்.
சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை:
2010 சாம்பியன்ஸ் லீக் டி20:
2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தையும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக வெற்றி பெற்று சாதித்தது.
2014 சாம்பியன்ஸ் லீக் டி20:
கடந்த 2014இல் இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது முறையாக இந்த கோப்பையை வென்று சாதனை படைத்தது.
Photo By BCCI/IPL |
இதர கோப்பைகள்:
இது மட்டுமல்லாமல் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக இந்தியா ஆஸ்திரேலியாவில் ஒரு கோப்பையை வென்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய வெற்றி பெற்றது.
- அந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை 4 - 0 என ஒயிட் வாஷ் செய்த அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
இது மட்டுமல்லாமல் பல நேருக்கு நேர் மோதிய கிரிக்கெட் தொடரின் கோப்பையையும் எம்எஸ் தோனி இந்தியாவிற்காக வென்று கொடுத்துள்ளார்.
வெற்றி கேப்டன்:
இத்தனை வெற்றிகளையும் தோனி தனி ஒருவனாக பெற்றுக் கொடுக்கவில்லை, அவரும் அவ்வாறு ஒருமுறை கூட கூறியதும் இல்லை, அணியில் இருந்த அத்தனை வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் வெற்றி பெற்றார்.
2021 ஐபிஎல் தொடர் முடிந்த பின் கூட "நான் தலைமையேற்ற அணிகளில் இருந்த வீரர்கள் சிறப்பாக விளையாடியதனாலேயே என்னால் கோப்பையை வெல்ல முடிகிறது" என தோனி வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இருப்பினும் ஒரு அணி உலக கோப்பை போன்ற ஒரு மிகப்பெரிய தொடர்களை வெல்வதற்கு அதை தலைமை ஏற்கும் கேப்டன் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானது, வலுவான வீரர்கள் இருந்தபோதிலும் சிறப்பான கேப்டன்கள் இல்லாத எத்தனையோ தரமான அணிகள் கோப்பையை வெல்ல முடியாத கதையை நாம் பலமுறை பார்த்துள்ளோம், இந்த விஷயத்தில்தான் தோனி மற்றவரை விட முன்னிலையில் இருக்கிறார்.
Search Tags: List Of Trophies Won By MS Dhoni, Trophy Collector MS Dhoni, MS Dhoni Trophies, Mahendra Singh Dhoni.