டி20 உலககோப்பை பைனல்களின் ஆட்டநாயகன்கள் - Man Of The Match in T20 World Cup Finals

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக தொடங்கியுள்ளது, தற்போது குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த உலக கோப்பையின் பிரதான சுற்றான சுப்பர் 12 சுற்று போட்டிகள் விரைவில் துவங்க உள்ளது.

List Of Man Of The Match in T20 World Cup History Finals
Kumar Sangakara | Marlon Samuels | Irfan Pathan (Photo : Getty Images)


பைனல்களின் நாயகன் :

உலககோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்படுவது மிகவும் கடினமான ஒன்றாகும், அதுவும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற "நாக் அவுட் போட்டிகளில் தோற்றால் கோப்பை பறி போய் விடுமே" என்ற பிரஷர் ஒரு திறமையான வீரரை கூட தவறு செய்ய வைத்து தோல்வியை பரிசளித்து விடும்.

அந்த வகையில் வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 6 ஐசிசி உலக கோப்பை தொடர்களின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பற்றிய பட்டியல்:

1. இர்பான் பதான் - இந்தியா, 2007:

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலகக்கோப்பையை இந்தியா வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது, ஜோகானஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக கைநழுவ இருந்த வெற்றியை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்த இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த உலகக் கோப்பை துவங்கியது முதலே இந்தியாவிற்கு பல வீரர்கள் ஜொலித்த காரணத்தினாலேயே கோப்பை வெல்ல முடிந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்த யுவராஜ் சிங், இறுதிப்போட்டியில் 75 ரன்கள் விளாசிய அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் கௌதம் கம்பீர் என பலர் வெற்றிக்காக பங்காற்றினார்கள்.

  • இருப்பினும் இறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் 8 ரன்கள், நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி டக் அவுட், யாசீர் அரபாத் 15 ரன்கள் என முக்கிய 3 வீரர்களை அவுட் செய்த வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆட்ட நாயகன் விருது வென்றார். 

2. ஷாஹித் அப்ரிடி - பாகிஸ்தான், 2009:

இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2009 ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பையில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

அதில் இலங்கை நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு 40 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 54* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து உதவிய சாகித் அப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

  • 54* ரன்கள் எடுத்ததுடன் ஒரு விக்கெட் எடுத்தும் இந்த வெற்றிக்கு அவர் பங்காற்றினார்.

3. கிரைக் கீஸ்வெட்டர் - இங்கிலாந்து, 2010:

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலுள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2010 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 147/6 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய இங்கிலாந்துக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிரைக் கீஸ்வெட்டர் 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உட்பட 63 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார், இதன் காரணமாக அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

4. மர்லான் சாமுவேல்ஸ - வெஸ்ட்இண்டீஸ், 2012:

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற 2012 ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இலங்கையை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் மர்லான் சாமுவேல்ஸ் 56 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 78 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் பின்னர் இலங்கையை வெறும் 101 ரன்களுக்கு சுருட்டி முதல் முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியது.

  • பேட்டிங்கில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட மார்லன் சாமுவேல்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

5. குமார் சங்கக்காரா - இலங்கை, 2014:

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின, இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு நட்சத்திர வீரர் விராட் கோலி 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர் உட்பட 76 ரன்கள் குவித்து இருந்தபோது ரன் அவுட்டானார், அவரை தவிர இதர பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தவறியதால் இந்தியா 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின் அதை துரத்திய இலங்கைக்கு நட்சத்திர வீரர் குமார் சங்ககாரா 35 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 52* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற செய்தார்

  • இலங்கையின் முதல் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு வித்திட்டதால் விராட் கோலியின் 77 ரன்களையும் தாண்டி 52 ரன்கள் குவித்த சங்ககாராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

6. மர்லான் சாமுவேல்ஸ - வெஸ்ட்இண்டீஸ், 2016:

இந்தியாவின் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2016 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 155/9 ரன்கள் எடுத்தது.

பின் 156 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு விஸ்வரூபம் எடுத்த மர்லான் சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உட்பட 85* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.

  • இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் 4 பந்துகளில் 4 மெகா சிக்ஸர் பறக்க விட்ட கார்லஸ் ப்ரேத்வைட் வெறும் 10 பந்துகளில் 24* ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல மிக மிக முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் கூட இந்த வெற்றிக்கு அடித்தளம் இட்ட சாமுவேல்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

  • இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


Search Tags : List Of Man Of The Match Winners in ICC T20 World Cup History, Man Of The Match In T20 World Cup Finals.

Previous Post Next Post

Your Reaction