WBBL 2021 : வரலாற்றிலேயே அதிகபட்சமாக 8 இந்திய வீராங்கனைகள்

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மகளிர் பிக் பேஷ் பிரீமியர் டி20 லீக் 2021 தொடர் 7வது முறையாக வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.


இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ரவுண்ட் ராபின் முறைப்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும், இதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி பின்னர் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது, மொத்தமாக இந்த தொடரில் 59 போட்டிகள் நடைபெற உள்ளன.

நம்பர் 1 மகளிர் பிக் பேஷ்:

உலக அளவில் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னோடியாகவும் புகழ் பெற்றதாகவும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது ஆனால் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டை பொருத்தமட்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த பிக் பேஷ் லீக் தான் உலக அளவில் நம்பர் ஒன் மகளிர் டி20 கிரிக்கெட் தொடராக உள்ளது.

8 இந்திய வீராங்கனைகள்:

இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீராங்கனைகளின் இறுதி ஒப்பந்தப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து 8 வீராங்கனைகளும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 6 வீராங்கனைகளும், இங்கிலாந்தில் இருந்து 4 வீராங்கனைகளும், நியூசிலாந்தில் இருந்து 2 வீராங்கனைகளும், இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 வீராங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

  • இதன் வாயிலாக வரலாற்றிலேயே அதிக பட்சமாக இந்த ஆண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் 8 இந்திய வீராங்கனைகள் பங்கேற்று சாதனை படைக்க உள்ளார்கள்.

இதன் வாயிலாக இந்திய மகளிர் கிரிக்கெட் ஒரு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதும் ஒரு மிகப்பெரிய வருங்காலத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதும் நமக்கு தெளிவாக தெரிகிறது.

சரி இந்த தொடரில் பங்கேற்கும் 8 இந்திய வீராங்கனைகளை பற்றிய விவரம் பார்ப்போம்:

மெல்போர்ன் ரெனெடிகட்ஸ்:

மெல்போர்ன் அணிக்காக 2 இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்மன்ப்ரீட் கௌர்: இந்திய டி20 அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த வருடம் மெல்போர்ன் அணிக்காக விளையாட உள்ளார், இவர் ஏற்கனவே கடந்த 3 வருடங்களாக மகளிர் பிக் பேஷ் தொடரில் விளையாடி 35.65 என்ற சராசரியில் ரன்கள் எடுத்துள்ளார்.

ஜெமிமா ரோட்ரிகஸ்: மற்றொரு அதிரடி இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் இந்த வருடம் மெல்போர்ன் அணிக்காக விளையாட உள்ளார்,

  • இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் 249 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த 2வது வீராங்கனையாக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி சிக்ஸர்ஸ்:

ஷபாலி வர்மா: வெறும் 17 வயது நிரம்பியுள்ள இளம் வீராங்கனை ஷபாலி வர்மா ஏற்கனவே தனது அதிரடி பேட்டிங் காரணமாக "லேடி சேவாக்" என ரசிகர்களிடம் பெயரை பெற்றுள்ளார், இவர் இந்த வருடம் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஓபனிங் வீராங்கனையாக களமிறங்க உள்ளார்.


ராதா யாதவ்: 21 நிரம்பிய இளம் சுழல்பந்து வீச்சாளர் வீராங்கனையான ராதா யாதவ் இந்தியாவிற்காக இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், பீல்டிங் செய்வதிலும் வல்லவராக இருக்கும் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிட்னி தண்டர்ஸ்:

ஸ்மிரிதி மந்தனா: இந்தியாவிற்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வரும் நட்சத்திர இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிட்னி தண்டர்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாட உள்ளார். இவர் ஏற்கனவே பிரிஸ்பேன் மற்றும் ஹோபார்ட் போன்ற பிபிஎல் அணிகளுக்காகவும் விளையாடியவர்.

தீப்தி சர்மா: இந்தியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி சர்மா சமீபத்தில் நடந்த "தி ஹண்ட்ரட்" கிரிக்கெட் தொடரில் லண்டன் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே கலக்கக்கூடிய இவர் இந்த முறை சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

பூனம் யாதவ்: இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சு வீராங்கனையான பூனம் யாதவ் இந்த வருடம் பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இவர் கடந்த 2020 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ரிச்சா கோஷ்: வெறும் 18 வயது நிரம்பியுள்ள இளம் இந்திய வீராங்கனையான ரிச்சா கோஷ் பிபிஎல் தொடரில் ஹோபர்ட் ஹரிகேனஸ் அணிக்காக விளையாட இந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விக்கெட் கீப்பர் வீராங்கனையான இவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவிப்பதில் வல்லவர்.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது, அந்த தொடர் முடிந்தவுடன் இந்த 8 வீராங்கனைகளும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து 2021 மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction