ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை 7வது முறையாக ஓமன் மற்றும் ஐக்கிய அரபு ஆகிய நாடுகளில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது, இந்த தொடரில் இந்தியா உட்பட உலகின் 16 முக்கியமான அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
India Vs Pakistan (Photo : Getty Images) |
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
இந்த உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2வது பிரிவில் இடம் பிடித்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர் கொள்கிறது.
கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 2 பரம எதிரிகள் என்றால் அதில் இந்தியா - பாகிஸ்தான் என்று கூறலாம், கடந்த பல வருடங்களாக எல்லைப் பிரச்சினைகள் காரணமாக இந்த இரு நாடுகளும் உலக கோப்பை போன்ற ஐசிசி தொடர்களை தவிர வேறு கிரிக்கெட் தொடர்களிலும் மோதாமல் இருப்பதால் இவ்விரு அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு முன்பை விட கூடுதலாக எகிறியுள்ளது.
கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி ஒரு மானப் பிரச்சினை என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணி வீரர்களும் முழுமூச்சுடன் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதால் உலக அளவில் இருக்கும் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
ராஜா இந்தியா:
உலககோப்பை என்று வந்தாலே அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தான் ராஜா எனக் கூறலாம் ஏனெனில் வரலாற்றில் இதுவரை 50 ஓவர் அல்லது 20 ஓவர் என 2 உலக கோப்பைகளிலுமே இந்தியாவை பாகிஸ்தானால் ஒரு முறை கூட வீழ்த்த முடியவில்லை.
எனவே ஒவ்வொரு முறை உலகக் கோப்பை தொடங்கும் பொழுதும் இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் அணியினர் கங்கணம் கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது, இருப்பினும் அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.
சரி 2021 டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டிகளைப் பற்றி பார்ப்போம் வாங்க:
1. குரூப் போட்டி, டி20 உலககோப்பை 2007:
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா ராபின் உத்தப்பா 50 ரன்கள், கேப்டன் தோனி 33* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 141 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது, அதை துரத்திய பாகிஸ்தானும் மிஸ்பா உல் ஹக் (53 ரன்கள்) அதிரடியில் 20 ஓவர்களில் சரியாக 141 ரன்களும் எடுக்க போட்டி டை ஆனது.
இதை அடுத்து அந்த உலக கோப்பையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றியை தீர்மானிக்க "பவுல் அவுட்" முறை கையாளப்பட்டது, அதில் இந்திய பவுலர்கள் கச்சிதமாக முதல் 3 பந்துகளிலும் ஸ்டம்பை குறிபார்த்து அடிக்க பாகிஸ்தான் பவுலர்கள் 3 முறையும் கோட்டை விட்டார்கள்.
இதன் காரணமாக இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
2. பைனல், டி20 உலககோப்பை 2007:
அதே உலகக்கோப்பையில் மீண்டும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கௌதம் கம்பீர் 75 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 30* ரன்கள் ஆகியோரின் அதிரடியில் 20 ஓவர்களில் 157/5 ரன்கள் எடுத்தது.
அதை துரத்திய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் சரிந்தாலும் மிஸ்பா உல் ஹக்கின் அதிரடியில் வெற்றியை கிட்டத்தட்ட நெருங்கியது, இதனால் தோல்வி உறுதி என நம்பிய இந்திய ரசிகர்களுக்கு யாரும் எதிர்பாரா வண்ணம் அதிகமான ரன்களை வழங்கிக்கொண்டிருந்த ஜோதிடர் சர்மாவிடம் கடைசி ஓவரை அனுபவமில்லாத கேப்டன் எம்எஸ் தோனி வழங்கினார்.
முதல் பந்திலேயே வைட் பின் சிக்ஸர் பறக்க விட்ட மிஸ்பா 3வது பந்தில் தேவையில்லாமல் மடக்கி அடிக்க அதைச் ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிக்க ரவிசாஸ்திரி வர்ணனை செய்ய இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வரலாற்று வெற்றியை பதிவு முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.
3. சூப்பர் 8 போட்டி, டி20 உலககோப்பை 2012:
இலங்கையில் கடந்த 2012-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 பிரிவில் பாகிஸ்தானை சந்தித்த இந்தியா தமிழகத்தின் லட்சுமிபதி பாலாஜி 3 விக்கெட்டுகள் எடுத்து அபாரமாக பந்து வீச பாகிஸ்தானை வெறும் 128 ரன்களுக்குள் சுருட்டியது.
பின் 129 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு விராட் கோலி 61 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 78* ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றிபெறச் செய்தார்.
Photo : Getty Images |
4. சூப்பர் 10 போட்டி, டி20 உலககோப்பை 2012:
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2014 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் டென் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா மீண்டும் அபாரமாக பந்துவீசி 20 ஓவர்களில் 130/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
பின் 136 ரன்களை துரத்திய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையான வெற்றி பெற்றது, இந்தியா சார்பில் பந்துவீச்சில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் விராட் கோலி 36* ரன்கள், சுரேஷ் ரெய்னா 35* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
5. சூப்பர் 10, டி20 உலககோப்பை 2016:
இந்தியாவில் கடைசியாக நடந்த 2016 டி20 உலக கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா சொந்த மண்ணில் சந்தித்தது, இருப்பினும் அந்த போட்டி மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் 23/3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பாகிஸ்தான் இறுதியில் 18 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது, பின்னர் 119 ரன்கள் இலக்கை சேசிங் செய்த இந்தியாவிற்கு விராட் கோலி 37 பந்துகளில் 55* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறச் செய்தார்.
Search Tags : India vs Pakistan in T20 World Cup, Ind Vs Pak T20 World Cup, Ind Vs Pak In World Cup.