ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 24இல் துபாயில் களமிறங்க உள்ளது, இந்தப் போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவில் இருக்கும் பல ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
India and Pakistan (Photo : Getty Images) |
எல்லை பிரச்சனைகள் காரணமாக இவ்விரு அணிகள் நேருக்கு நேரான கிரிக்கெட் தொடர்களில் கடந்த பல வருடங்களாக மோதுவதில்லை.
- கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியாவின் ராஜாங்கம்:
உலககோப்பை என்று வந்தாலே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தான் ராஜா என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும் ஏனெனில் 50 ஓவர் அல்லது 20 ஓவர் என எந்த வகையான உலக கோப்பைகளிலும் வரலாற்றில் ஒருமுறைகூட பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை.
குறிப்பாக டி20 உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது, எனவே வழக்கம் போல இந்த முறையாவது இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என மீண்டும் பாகிஸ்தான் அணியினர் கங்கணம் கட்டியுள்ளனர்.
2வது வீடு துபாய்:
கடந்த பல வருடங்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு எந்த ஒரு கிரிக்கெட் அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை, எனவே கடந்த பல வருடங்களாக 2021 டி20 உலகக்கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் அதிகமாக விளையாடிய அனுபவம் உள்ளது.
எனவே ஐக்கிய அரபு நாடுகள் தங்களது 2வது வீடு போன்றதாகும் என்பதால் இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெல்ல முடியுமா:
ஒருவேளை இந்த உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்த முடியுமா என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல் பார்ப்போம்:
கடந்த 10 வருடங்களில் பாகிஸ்தான் 129 போட்டிகளில் பங்கேற்று 77 வெற்றிகளை 59.70 என்ற வெற்றி விகிதத்தில் குவித்து சிறப்பாகவே விளையாடி வருகிறது.
- போட்டிகள் - 129
- வெற்றிகள் - 77
- தோல்விகள் - 45
- டை / முடிவு இல்லை - 7
- வெற்றி விகிதம் - 59.70
மறுபுறம் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானை விட மார்தட்டும் அளவுக்கு சற்று அதிகமான வெற்றிகளையே குவித்துள்ளது.
- போட்டிகள் - 115
- வெற்றிகள் - 73
- தோல்விகள் - 37
- டை / முடிவு இல்லை - 5
- வெற்றி விகிதம் - 63.5
மொத்தத்தில் கடந்த 10 வருடங்களில் பாகிஸ்தானை விட இந்தியா டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளை குவித்து வலுவாக அணியாகவே உள்ளது.
Photo : Getty Images |
கடைசி 2 உலககோப்பைகள்:
2007இல் நடந்த முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் 2009 இல் நடந்த 2வது உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது, இருப்பினும் அதன் பின் நடந்த உலக கோப்பைகளில் அந்த அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றே கூறலாம்.
கடைசியாக கடந்த 2014 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற 2 உலக கோப்பைகளில் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
குறிப்பாக கடந்த 2014 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் பங்கேற்று 2 தோல்விகள் மற்றும் வெறும் 2 வெற்றியுடன் இடம் பெற்றிருந்த குரூப் பிரிவில் 4வது இடம் பிடித்து சூப்பர் 10 சுற்றோடு வெளியேறியது.
அதேபோல் இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்ற 4 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து 3 தோல்வியுடன் சூப்பர் 10 சுற்றோடு வெளியேறியது.
வலுவான இந்தியா:
மறுபுறம் 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை தவிர ஒரு தோல்வியைக் கூட இந்தியா சந்திக்காமல் வெற்றி நடை போட்டது, அதேபோல் 2016 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற கடைசி டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதி சுற்று வரை முன்னேறி அசத்தியது.
மொத்தத்தில் எந்த வகையில் பார்த்தாலும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியாவின் கை சற்று மேலே ஓங்கியுள்ளது இதன் வாயிலாக தெளிவாக தெரிகிறது, இந்த வெற்றி நடை அக்டோபர் 24ஆம் தேதியும் தொடரும் என இந்திய ரசிகர்கள் நம்பலாம்.