பாகிஸ்தான் நாட்டுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்கேற்க இருந்த கிரிக்கெட் தொடர்களை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து என இரண்டு நாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்தடுத்து ரத்து செய்தது.
Photo : Getty |
காரணம் இந்தியா:
இதனால் கடும் விரக்தி அடைந்து ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இதற்கு இந்தியா தான் முழு முதற் காரணம் என வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக நியூசிலாந்துக்கு அச்சுறுத்தல் இந்தியாவிலிருந்துதான் விடுக்கப்பட்டது என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார், அத்துடன் இதற்காக நாங்கள் இந்தியாவை வருகின்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பழி தீர்ப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜாவும் வெளிப்படையாக பேசினார்.
இம்ரான் கான்:
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர், கேப்டன் மற்றும் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது பற்றி அவர்,
- கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரியங்கள் என அனைத்திலும் பணம் தான் தற்போது மிகப் பெரிய வீரராக உள்ளது, இந்தியாவில் பணம் அதிக அளவில் பொய்கள் பேசுகிறது. எனவே அடிப்படையாக உலக கிரிக்கெட்டை இந்தியா ஆட்டிப்படைக்கிறது, அதாவது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நடத்துகிறார்கள். இந்தியா அதிக அளவில் பணத்தை மீட்டுத் தருகிறது என்பதால் அவர்களுக்கு எதிராக பேசுவதற்கு யாருக்கும் தைரியமும் இல்லை
என தெரிவித்த இம்ரான்கான் தங்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தால் உலக கிரிக்கெட்டை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
உலகிலேயே இருக்கும் கிரிக்கெட் வாரியங்களை விட இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது, இதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசிக்கு 70-90% வருமானம் இந்தியாவில் இருந்து கிடைக்கிறது என்பது உண்மையாகும்.
கைவிட்ட இங்கிலாந்து:
நியூஸிலாந்து தான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காரணத்தால் தொடரை ரத்து செய்தது ஆனால் அந்த காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு கூட செல்லாமல் கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டது. மேலும் 2020இல் இங்கிலாந்தில் நிலவிய மோசமான சூழலிலும் கூட பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு உதவியது ஆனால் பதிலுக்கு இங்கிலாந்து கைமாறு செய்ய தவறிவிட்டது. இதுபற்றி இம்ரான்கான்,
இங்கிலாந்து தங்களைத் தாங்களே கைவிட்டு விட்டார்கள் என நினைக்கிறேன், மேலும் இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் விளையாட விருப்பம் இருந்தது ஆனால் பணம் என்ற ஒரு காரணத்தால் அனைத்தும் மாறிப்போனது
என தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாததை நினைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் வருந்த வேண்டும் என இம்ரான்கான் கூறினார்.