ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.
Photo By BCCI/IPL |
இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 போட்டிகளில் முதலில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்திய போட்டியில் பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பிளே ஆப் சுற்றில் பெங்களூரு:
இதன் வாயிலாக இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக 3வது அணியாக நேற்று தகுதி பெற்றது.
- இதன் காரணமாக கேப்டனாக தனது கடைசி சீசனில் பெங்களூருவை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து வந்துள்ள விராட் கோலி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
வெளியேறிய ஹைதெராபாத்:
பின் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.
இதன் காரணமாக இந்த சீசனில் 12 போட்டிகளில் பங்குபெற்ற ஹைதராபாத் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
ஒரு இடத்துக்கு 4 அணிகள்:
இது வரை ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் 4வது இடத்தை பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த 4வது இடத்தை பிடிக்க இந்த 4 அணிகளும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்:
1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளி பட்டியலில் தற்போதைக்கு 4வது இடத்தில் உள்ளது.
அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும்.
- அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எஞ்சிய 2 போட்டிகளிலோ அல்லது ஏதேனும் ஒரு போட்டியிலோ தோற்க வேண்டும், அப்படி நடந்தால் அந்த அணிக்கு 62.6% வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
ஒருவேளை எஞ்சிய 2 போட்டிகளில் மும்பை வென்று விட்டால் கூட நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கொல்கத்தாவுக்கு 37.5% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
அதற்கும் தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது.
2. பஞ்சாப் கிங்ஸ்:
எளிமையாக வெற்றி பெற வேண்டிய போட்டிகளை கோட்டை விட்டுவிட்டு எதிர் அணியின் தோல்விக்காக காத்திருக்கும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
அந்த அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் தனது கடைசி லீக் போட்டியில் சென்னைக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
- அத்துடன் எஞ்சிய லீக் போட்டிகளில் ராஜஸ்தானை மும்பை தோற்கடிக்க வேண்டும்.
- ராஜஸ்தான் கொல்கத்தாவை தோற்கடிக்க வேண்டும்
- ஏற்கனவே வெளியேறிய ஹைதராபாத் நடப்புச் சாம்பியன் மும்பையை வீழ்த்த வேண்டும்
இவை அனைத்தும் நடைபெற வாய்ப்பு மிக மிக குறைவு என உங்களுக்கே தெரியும், இவை எல்லாம் நடைபெற்றாலும் கூட வெறும் 6% வாய்ப்புகள் மட்டுமே பஞ்சாப் அணிக்கு உள்ளது.
3. ராஜஸ்தான் ராயல்ஸ்:
புள்ளி பட்டியலில் 5 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 6வது இடத்தில் உள்ளது.
- பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி இனிய போட்டிகளில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதுமானது.
ஒருவேளை இந்த 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால் கூட ரன்ரேட் அடிப்படையில் 4வது இடத்தை அந்த அணியால் பிடிக்க முடியும், இருப்பினும் அது மற்ற 3 அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.
4. மும்பை இந்தியன்ஸ்:
5 சாம்பியன் பட்டங்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணியான ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் இந்த முறை மோசமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
மற்ற 3 அணிகளை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ்க்கு தான் தற்போதைய நிலைமையில் ரன் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.
- எனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி எஞ்சிய 2 லீக் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும், அதுமட்டுமல்லாமல் கொல்கத்தாவை ராஜஸ்தான் வீழ்த்தியாக வேண்டும்.