ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சென்னை, டெல்லி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
மாபெரும் பைனல்:
இதை தொடர்ந்து ஐபிஎல் 2021 கோப்பையை வெல்வதற்காக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் மாபெரும் இறுதி போட்டி அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
இந்த போட்டியை ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.
முன்னோட்டம்:
சென்னை:
எம்எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் இதுவரை 3 முறை கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியாக விளங்குகிறது.
அந்த அணிக்கு தொடக்க வீரர்களான டு ப்ளேஸ்ஸிஸ் மற்றும் இளம் வீரர் ருதுராஜ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள்.
கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார், இருப்பினும் அவர்களை மட்டுமே நம்பி இருக்காமல் மொயின் அலி, அம்பத்தி ராயுடு போன்ற முக்கியமான வீரர்கள் இறுதிப்போட்டியில் ரன்கள் அடிக்க வேண்டும்.
ரவீந்திர ஜடேஜாவுடன் டெல்லிக்கு எதிரான போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து 6 பந்துகளில் 18* ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் டோனியும் இறுதிப்போட்டியில் ஜொலிக்க வேண்டும்.
பந்துவீச்சில் டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், ஜோஷ் ஹேசில்வுட் தீபக் சஹர் ஆகியோர் பொறுப்புணர்ந்து பந்து வீச்சினால் 4வது முறையாக சென்னை கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகும்.
கொல்கத்தா:
2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தாவை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டிலுமே கை கொடுக்கிறார்.
இவருடன் கில், திரிபாதி, ராணா ஆகியோர் தேவையான ரன்கள் அடித்த காரணத்தால் அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.
இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் ரன்கள் குவிக்க முடியாமல் திணறுவது பெருத்த பின்னடைவை கொடுக்கிறது.
பவுலராக இருக்கும் சுனில் நரேன நல்ல பார்மில் இருப்பதுடன் பேட்டிங்கில் திடீரென களமிறங்கி சிக்ஸர் பறக்க விடுவது அந்த அணிக்கு பலத்தை சேர்க்கிறது.
பந்துவீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து அந்த அணியின் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார். லாக்கி பெர்குசன், ஷிவம் மாவி போன்றவர்கள் சிறப்பான பந்து வீசினால் அந்த அணி எளிதாக வெற்றி பெறலாம்.
Photo : BCCI/IPL |
புள்ளிவிவரம்:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- அதில் சென்னை 16 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது, கொல்கத்தா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்த 2 அணிகள் மோதிய 3 போட்டிகளில் சென்னை 2 போட்டிகளிலும் கொல்கத்தா 1 போட்டியிலும் வெற்றி பெற்றன.
- கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய 6 போட்டிகளில் சென்னை 5 முறை வெற்றி பெற்றுள்ளது, கொல்கத்தா 1 முறை மட்டுமே வென்றுள்ளது.
குறிப்பாக இந்த வருடம் 2021 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் இந்த 2 அணிகள் மோதிய 2 போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றது.
பிட்ச் விவரங்கள்:
இந்த மாபெரும் இறுதி போட்டி நடைபெறும் துபாய் கிரிக்கெட் மைதானம் இந்த வருடம் ஐபிஎல் தொடங்கிய நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக கை கொடுத்து வந்தது, இருப்பினும் கடைசி 4 இந்த போட்டிகளில் இந்த மைதானமும் சார்ஜா போல பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த சவாலை கொடுக்கிறது.
இதன் காரணமாக பந்து வீச்சாளர்களின் கை கடைசி சில போட்டிகளில் ஓங்கி காணப்பட்டது, எனவே இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்யும் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- இந்த வருடம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸை 152 ஆகும்.
- மேலும் இங்கு இந்த வருடம் நடைபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் 9 முறை வென்றுள்ளன,முதல் பேட்டிங் செய்த அணிகள் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
எனவே டாஸ் வெல்லும் கேப்டன் ஜேசிங் தேர்வு செய்வது நல்லது.
உத்தேச அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை அணியில் முக்கியமான இறுதிப்போட்டிக்கு நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ருதுராஜ் கைக்வாட், பப் டு பிளெஸ்ஸிஸ்,மொயின் அலி, அமபத்தி ராயுடு, ராபின் உத்தப்பா/சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் - கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஷர்டுல் தாகூர், ட்வயன் பிராவோ, ஜோஷ் ஹேசல்வுட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா அணியிலும் அதிரடி நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் இந்த இறுதி போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன் (கேப்டன்), சுனில் நரேன், சாகிப் அல் ஹசன்/ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக், ஷிவம் மாவி, லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி.