IND vs NZ T20 World Cup : நியூஸிலாந்தை சாய்க்க முடியாமல் திண்டாடும் இந்தியா

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் இந்தியா இடம் வகிக்கும் குரூப்-2 பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.

Ind Vs Nz T20 World Cup
Photo Credits Getty Images


தடுமாறும் இந்தியா:

இந்த உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சூப்பர் 12 போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் மோசமான பேட்டிங் துவக்கத்தை பெற்ற இந்தியா பின்னர் பவுலிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுமோசமாக தோல்வியடைந்தது, உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது மட்டுமல்லாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை பெருத்த கவலை கொள்ள வைத்துள்ளது.

இதை அடுத்து இந்தியா தனது 2-வது சூப்பர் 12 போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை அக்டோபர் 31ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த டி20 உலககோப்பையின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

வலுவான நியூஸிலாந்து:

நியூஸிலாந்தை பொறுத்தவரை மற்ற அணிகளுக்கு எதிராக எப்படியோ ஆனால் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவிடம் நியூசிலாந்து ஒருமுறைகூட தோற்றதே கிடையாது, ஆம் டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதற்கு முன் 2 போட்டிகளில் மோதியுள்ளன அந்த 2 முறையும் நியூஸிலாந்து வெற்றி பெற்று அசத்தி உள்ளது. அவையாவன:

1. ஐசிசி டி20 உலககோப்பை, 2007:

  • தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றில் முதல் டி20 உலக கோப்பையில் குரூப் ஈ பிரிவில் இடம் பிடித்த இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் "பவுல் அவுட்" வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது, இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து இந்தியாவின் பந்துவீச்சை சரமாரியாக அடித்து 20 ஓவர்களில் 190 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து சார்பில் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 45 ரன்கள் எடுத்தார், இந்தியா சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் ஆர்பி சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் கௌதம் கம்பீர் வெறும் 33 பந்துகளில் 51 ரன்களும் வீரேந்திர சேவாக் வெறும் 17 பந்துகளில் 44 ரன்களும் எடுக்க அதிரடியான தொடக்கம் பெற்றது, இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் எம்எஸ் தோனி 20 பந்துகளில் 24 ரன்கள் தவிர இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால் இந்தியா 20 ஓவர்களில் 180/9 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2. ஐசிசி டி20 உலககோப்பை, இந்தியா, 2016:

அதன்பின் கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 6வது ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 126/7 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 42 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 127 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்தி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 18.1 ஓவரில் வெறும் 79 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

  • அதிகபட்சமாக கேப்டன் எம்எஸ் தோனி 30 ரன்களும் விராட் கோலி 24 ரன்களும் எடுத்தனர்.

டி20 கிரிக்கெட்டிலும் தடுமாற்றம்:

டி20 உலகக்கோப்பையில் தான் நியூசிலாந்திடம் இந்தியா தடுமாறுகிறது என்று பார்த்தால் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டிலும் கூட நியூசிலாந்திடம் இந்தியா தடுமாறி வருகிறது.

Ind vs Nz Cricket World Cup
Photo : Getty Images

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் களமிறங்கியுள்ளது.

  • அதில் நியூசிலாந்து 8 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது, இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றது, 2 போட்டிகள் டை'யில் முடிந்தன.
  • அதாவது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 56.25 % வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றி சராசரி விகிதத்தை ( 56.25% ) கொண்ட அணியாக நியூஸிலாந்து திகழ்கிறது.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில் வலுவான நியூஸிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Previous Post Next Post

Your Reaction