ஐபிஎல் 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
(Photo By BCCI/IPL) |
இதன் வாயிலாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி வரும் அக்டோபர் 11 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எலிமினேட்டர் போட்டியில் சந்திக்கிறது.
கழட்டிவிட்ட பஞ்சாப்:
இந்த வருடம் ப்ளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெறுவதற்கு பேட்டிங் துறையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
அந்த அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சற்று பார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள், இருப்பினும் கூட அதை மேக்ஸ்வெல் தனது அதிரடியால் சமாளித்து வருகிறார்.
கடந்த வருடம் வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட காரணத்தால் அந்த அணி நிர்வாகம் கடந்த வருடமே கழட்டி விட்டது.
- அவர் 2020 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பார்மில் இருந்தார்.
இதனால் அவரின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்த வேளையில் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14.25 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.
விஸ்வரூபம்:
அந்த நம்பிக்கையை மேக்ஸ்வெல் காப்பாற்றினாரா என்றால் 2 மடங்கு காப்பாற்றியுள்ளார் என்றே கூறலாம்.
- ஏனெனில் 2012 - 2020 வரை அவர் பங்கேற்ற 8 ஐபிஎல் தொடர்களில் 6 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார் ஆனால் இந்த 2020 ஒரே சீசனில் இதுவரை 6* சதங்கள் அடித்து மிரட்டி உள்ளார்.
மேலும் கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் 3 தொடர்ச்சியான அரை சதங்கள் விளாசி அசத்தியுள்ளார்.
- கடந்த வருடம் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை, ஆனால் இந்த வருடம் 21 சிக்சர்களையும் 39 பவுண்டரிகளையும் 146.55 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அடித்து எதிர் அணியை பந்தாடியுள்ளார்.
குறிப்பாக பந்துவீச்சாளர் எதிர்பாராத வேளையில் திடீரென இடதுகை பேட்ஸ்மேனாக திரும்பி சிக்ஸரை வெளுத்து வாங்குகிறார்.
லெக் ஸ்பின்னர்கள் :
அதேபோல் கடந்த வருடம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 44 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஆனால் இந்த வருடம் 145 பந்துகளை சந்தித்து 237 ரன்களை விளாசி வெளுத்து வாங்கியுள்ளார், இதில் 17 சிக்ஸர்களும் அடங்கும்.
வெற்றி ரகசியம்:
போன வருடத்தில் இருந்து மேக்ஸ்வெல் எப்படி மீண்டு வந்துள்ளார் என்பது பற்றி பார்ப்போம்:
பொதுவாக லெக் ஸ்பின்னர்களை வலது கை பேட்டர்கள் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான இருக்கும், கடந்த வருடம் கிளன் மேக்ஸ்வெல் அதிகமாக லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து அவுட்டாகி வந்தார்.
ஆனால் இந்த வருடம் அவர்கள் வீசும் கூக்லி பந்துகளை சிறப்பாக கணித்து விளையாடுகிறார்.
- இதற்கு சான்றாக கடந்த வருடம் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் பேட்டிங் சராசரி வெறும் 6.5 ஆகும்.
- இந்த வருடம் அவர்களுக்கு எதிராக 74 பந்துகளை சந்தித்து 130 ரன்களை அடித்துள்ளார்.
குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற லீக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளரான ரசித் கான் வீசிய முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் மெகா சிக்ஸர் பறக்க விட்டார், ரசித் கான் வீசிய அடுத்த ஓவரிலும் மேக்ஸ்வெல் ஒரு சிக்சரை பறக்க விட்டார்.
வெற்றிப்பயணம் தொடருமா:
மொத்தத்தில் பஞ்சாப் அணியால் சென்ற வருடம் கழட்டி விடப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் இந்த வருடம் பெங்களூரு அணியில் விஸ்வரூபம் எடுத்து உள்ளார் என்று கூறினால் மிகையாகாது.
டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவரின் இந்த விஸ்வரூப பார்ம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகிறார்.
Punjab Kings (Photo : BCCI/IPL) |
பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு முன்னேறியுள்ள நிலையில் இனி வரும் முக்கியமான நாகவுட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி பெங்களூருவின் நீண்ட வருட கனவான முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அந்த அணியின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.