முடிந்த சகாப்தம் : கடைசி வரை எட்டாமலே சென்ற ஐபிஎல் கனி - வலியுடன் விடைபெற்ற விராட் கோலி

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Photo : BCCI/IPL


சுனில் நரேன் சுழல் :

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங்கால் 49/0 என நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில் சுனில் நரைன் வீசிய பந்தில் 39 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டிருந்த விராட்கோலி போல்ட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் படிக்கள் 21 ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த பரத் 9, நம்பிக்கை நட்சத்திரங்களான கிளன் மேக்ஸ்வெல் 15, ஏபி டிவில்லியர்ஸ் 11 ஆகியோரை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் சுனில் நரேன் அவுட் செய்து பெவிலியன் திரும்பினார்.

இதிலிருந்து மீள முடியாத பெங்களூரு 20 ஓவர்களில் 135/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய சுனில் நரேன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

கொல்கத்தா வெற்றி:

பின்னர் களமிறங்கிய கொல்கத்தாவிற்கு கில் 29 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுக்க அந்த நேரத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் எடுத்த பெங்களூரு வெற்றி பெற போராடியது.

ஆனால் அப்போது களமிறங்கிய சுனில் நரேன் இந்த முறை பேட்டிங்கில் சந்தித்த முதல் 3 பந்துகளில் 3 சிக்சர் பறக்கவிட்டு வெறும் 15 பந்துகளில் 27 ரன்கள் குவித்து பெங்களூருவின் வெற்றியை தகர்த்தார். இறுதியில் மோர்கன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் பினிஷிங் செய்ய கொல்கத்தா வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டியில் டெல்லி அணியை சந்திக்க தகுதி பெற்றது.

நிறைவேறாத கனவு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வகிக்கும் கேப்டன்ஷிப் பொறுப்பை இந்த வருடத்துடன் ராஜினாமா செய்வதாக ஏற்கனவே விராட் கோலி அறிவித்திருந்தார், அந்த வேளையில் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோற்று ஐபிஎல் 2021 தொடரில் இருந்து அந்த அணி வெளியேறியதன் காரணமாக விராட் கோலியின் ஐபிஎல் கோப்பை கனவு கடைசிவரை நிறைவேறாமலேயே போனது.

எட்டாத கனி:

கடந்த 2013இல் பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வெற்றி பெறுவதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் கொடுத்ததை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

Photo : BCCI/IPL


விராட்கோலி மட்டுமல்லாது கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், தற்போது கிளன் மேக்ஸ்வெல் என பல நட்சத்திரங்கள் தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் அந்த அணியில் விளையாடியதால் ஒவ்வொரு முறையும் "இந்த வருடம் பெங்களூரு எளிதாக ஐபிஎல் கோப்பையை வென்று விடும்" என அந்த அணியின் மீது அந்த அணி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டேதான் இருந்தது.

ஆனால் நாக் அவுட் போன்ற முக்கியமான நேரங்களில் சொதப்பி தோல்வி பெறுவது அந்த அணிக்கு ஆரம்பம் முதலே தொடர்கதையாக இருந்து வருகிறது, இதனால் கேப்டனாக இருந்த விராட் கோலி பலமுறை வெளிப்படையாகவே முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

சிறந்த பேட்டர்:

பொதுவாக விராட் கோலி தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் கொடுக்கும் ஒரு வீரராகவே வலம் வருகிறார் குறிப்பாக தனது பேட்டிங்கால் பெங்களூர் அணியின் வெற்றிக்கு விராட் கோலியை விட பாடுபட்டவர் யாரும் இருக்கமுடியாது என்றே கூறலாம். 

எடுத்துக்காட்டாக 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 976 ரன்கள் குவித்து யாராலும் உடைக்க முடியாத சாதனை படைத்ததை கூறலாம், அதன் காரணமாக அந்த வருடம் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெங்களூரு தகுதி பெற்று பின்னர் தோல்வி பெற்றது.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டனாக சாதனை படைத்துள்ளதும் எந்த அளவுக்கு அவர் பெங்களூர் அணிக்காக தம்மால் முடிந்தவரை பேட்டிங்கில் பாடுபட்டுள்ளார் என தெரிந்து கொள்ளலாம்.

  • விராட் கோலி - 4481* ரன்கள்.
  • எம்எஸ் தோனி - 4456 ரன்கள்.

கேப்டனாக :

கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி விளையாட்டு என்பதும் இதில் வெற்றி பெறுவதற்கு ஒருவரால் மட்டும் முடியாது என்பதை நாம் அறிவோம், அத்துடன் ஒரு வெற்றியை தீர்மானிக்க அந்த அணியின் கேப்டன் எடுக்கும் ஒரு சிறிய நுணுக்கமான முடிவு கூட பெரிய அளவில் வேலை செய்யும் என்பதையும் நாம் அறிவோம்.

இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பலமுறை நாம் பார்த்துள்ளோம், என்னதான் பேட்ஸ்மேனாக விராட் கோலி மலையளவு ரன்கள் குவித்தாலும் ஒரு சில முக்கியமான நேரங்களில் கேப்டனாக அவர் கோட்டை விடுவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

விராட் கோலி தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

  • போட்டிகள் - 140.
  • வெற்றிகள் - 66.
  • தோல்விகள் - 72.
  • முடிவு இல்லை - 4.
  • வெற்றி விகிதம் - 48.52%.

2016 சீசனில் இறுதிப் போட்டியிலும் 2015, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி தோற்றது. இதிலிருந்தே ஒரு கேப்டனாக விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுத்த தவறியுள்ளார் என்பது தெளிவாகத் தெரியும்.

முடிந்த சகாப்தம்:

விராட் கோலி தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரையும் (263/5) குறைந்தபட்ச ஸ்கோரை (49 ஆல் அவுட்) பதிவு செய்த அணியாக பெங்களூரு உள்ளது, கோப்பையை வெற்றி பெறாவிட்டாலும் இன்றைய ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்றால் அது விராட் கோலி என்ற அடையாளமே பலருக்கும் தெரியும்.

அதேபோல தோல்வியின் போதிலும் பெங்களூர் அணியின் ரசிகர்களும் விராட் கோலியை தங்களது மனதில் வைத்து தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இதன் காரணமாகவே

எனக்கு விசுவாசம் தான் முக்கியம், எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை பெங்களூர் அணிக்காக விளையாடும், அடுத்த சீசனில் 120% அளவுக்கு பாடுபடுவேன்

எனவும் விராட் கோலி நேற்றைய தோல்விக்கு பின்பு சிரித்த முகத்துடன் தெரிவித்தார் ஆனால் அந்த சிரிப்பில் எவ்வளவு வலி இருந்தது என பார்த்த ரசிகர்களுக்கு தெரியும், எது எப்படி இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction