IND vs NZ 2021 : இந்தியாவை சொந்த மண்ணில் சாய்ப்பதே அடுத்த லட்சியம் - டேவோன் கோன்வே

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதன்பிறகு வரும் அக்டோபர் 17 இல் துவங்கும் ஐசிசி டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளனர், இந்த உலக கோப்பையில் பங்கேற்ற விட்டு இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்ப உள்ளது.

Devon Conway (Photo By Getty Images)


நியூஸிலாந்து சுற்றுப்பயணம்:

அதை தொடர்ந்து வரும் நவம்பரில் இந்தியாவிற்கு வரும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது.

இந்தியா தோல்வி:

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐசிசி டெஸ்ட் சாமபியன்ஷிப் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடங்கியது முதல் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த போதிலும் இறுதி போட்டியில் நியூசிலாந்துடன் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

மீண்டும் வருவோம்:

அந்த தோல்விக்குப் பின் முதல் முறையாக வரும் நவம்பரில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த தொடரிலும் இந்தியாவை அதுவும் இந்த முறை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்வதே தங்களின் லட்சியம் என நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரபல நியூசிலாந்து நாளிதழில் அவர்,

கண்டிப்பாக அந்தத் தொடர் நாங்கள் சாதிப்பதற்கு மிகப்பெரிய லட்சியமாகும், இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இங்கிலாந்தில் அவர்களை வீழ்த்தியதை விட மிகவும் கடினமான சவாலாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வீழ்த்தியது போல இதுவும் மிகப்பெரிய சாதனையாக எங்களுக்கு இருக்கும், இந்தத் தொடர் எங்களை நிரூபிப்பதற்கு ஒரு முக்கியமான தொடராகும்

என இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்கடித்ததை விட இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதே மிகப்பெரிய லட்சியம் என டேவோன் கான்வே தெரிவித்தார்.

கடினமான இந்தியா:

இருப்பினும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எதிரணிக்கு அவ்வளவு சுலபமான காரியம் அல்ல

Team India (Getty Images)


  • ஏனெனில் விராட் கோலி பொறுப்பேற்ற பின் இந்தியா சொந்த மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றது கிடையாது.

அத்துடன் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் வெளிநாட்டு அணிகள் அவ்வளவு எளிதாக இந்தியாவை வீழ்த்த முடியாது குறிப்பாக நியூசிலாந்து போன்ற ஆசியக் கண்டத்திற்கு வெளியே இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பேட்ஸ்மென்கள் இந்தியாவில் ரன்கள் குவிப்பது சற்று சிரமமான காரியமாகும். அது பற்றி அவர்,

சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இந்தியத் துணைக் கண்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பாக விளையாடுவதற்கு முதலில் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் தடுப்பாட்டத்தை அதிகம் நம்பியாக வேண்டும், சிறப்பாக ரன்கள் குவிக்க முன்கூட்டியே திட்டங்களை தயாராக வைத்திருக்கவேண்டும் அப்போதும் கூட அங்கு ரன்கள் குவிப்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்

என தெரிவித்தார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது, அந்த மோசமான தருணங்களுக்கு பின் நியூசிலாந்து பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் அந்நாட்டு வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Previous Post Next Post

Your Reaction