ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றில் நடைபெற்ற 56 போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
Photo By BCCI/IPL |
குவாலிபயர் 1:
- இதை அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் சுற்றில் குவாலிபர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை துபாயில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக வரும் அக்டோபர் 15 இல் நடைபெறும் ஐபிஎல் 2021 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதே இந்த போட்டியின் சிறப்பம்சமாகும்.
அதே சமயம் இந்த போட்டியில் தோற்கும் அணி அக்டோபர் 11இல் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஒருவேளை அந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.
நேரடி ஒளிபரப்பு:
முன்னோட்டம்:
டெல்லி: இளம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இந்த வருடம் நடைபெற்ற லீக் சுற்றில் எதிரணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 10 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
பேட்டிங்கில் தவான், ஷா, ஷ்ரேயஸ் ஐயர் போன்ற நட்சத்திரங்கள் தேவையான ரன்களை அளிப்பதால் இறுதியில் ஹெட்மையர் பினிஷிங் செய்து போட்டிகளை வென்று தருகிறார்.
அதேபோல் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் அண்ட்ரிச் நோர்ட்ஜெ, ககிசோ ரபாடா ஆகியோருடன் இந்திய இளம் வீரர் ஆவேசம் கான் சேர்க்கிறார். சுழல் பந்து வீச்சிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல் ஆகியோர் கை கொடுக்கிறார்கள்.
இருப்பினும் அந்த அணி கேப்டன் ரிஷப் பண்ட் ரன்கள் அடிக்க தடுமாறி வருவது அந்த அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கிறது, மேலும் கடைசி போட்டியில் பெங்களூருவிடம் போராடி தோற்றது.
எனவே இருக்கும் ஒரு சில குறைகளை சரி செய்துகொண்டு குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற டெல்லி தயாராகியுள்ளது.
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 சாம்பியன் பட்டங்களுடன் 2வது வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக வரலாற்றில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது ஆனாலும் இந்த ஆண்டு அபாரமாக செயல்பட்டு அதே வீரர்களை வைத்துக் கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது அந்த அணி வீரர்களிடமும் ரசிகர்களிடமும் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அடுத்த 3 போட்டிகளில் வரிசையாக தோற்று ஹாட்ரிக் தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் தனது லீக் சுற்றை முடித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர்களான டு பிளசிஸ் மற்றும் இளம் ருத்ராஜ் கைக்வாட் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள், நடுவரிசையில் அம்பத்தி ராயுடு ஓரளவு ரன்கள் அடிக்க பினிஷிங் செய்வதற்கு ரவீந்திர ஜடேஜா முடிந்தவரை பாடுபடுகிறார்.
ஆனால் மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி உட்பட அந்த அணியன் மிக முக்கியமான வீரர்கள் ரன்கள் குவிக்க திணறுகிறார்கள்.
பந்துவீச்சிலும் ப்ராவோ, தாகூர் போன்ற பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தீபக் சஹர், ஹேசல்வுட் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பான பௌலிங் வீச முடியாமல் தவிக்கிறார்கள்.
மொத்தத்தில் அந்த அணியில் நிறைய ஓட்டைகள் உள்ளது தெளிவாகவே எதிரணிக்கு தெரியும் என்பதால் குறைகளையும் தோல்விகளையும் சரி செய்துவிட்டு குவாலிபயர் 1 போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற தோனியின் சென்னை தயாராக உள்ளது.
புள்ளிவிவரம்:
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த 2 அணிகளும் வரலாற்றில் மொத்தம் 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- அதில் சென்னை 15 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது, டெல்லி 10 போட்டிகளில் வென்றுள்ளது.
இருப்பினும் 2021 ஐபிஎல் தொடரின் 2 லீக் போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்று அசத்தியது.
- குறிப்பாக போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகள் மோதிய 4 போட்டிகளில் டெல்லி 3 முறை வெற்றி பெற்ற அசத்தியுள்ளது, சென்னை 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் விவரம்:
இந்த போட்டி நடைபெறும் துபாய் மைதானம் பேட்டிங் பவுலிங் என இரண்டுக்குமே சமமாக கைகொடுத்து வருகிறது, இருப்பினும் கடைசியாக நடந்த ஒரு சில போட்டிகளில் பேட்டிங் மிகவும் கடினமாக இருந்தது, சுழல் பந்துவீச்சு சிறப்பாக எடுபட்டது என்பதால் திறமையை வெளிப்படுத்தும் அணிகள் ஜொலித்து வெற்றி பெறலாம்.
- இந்த மைதானத்தில் இந்த வருடம் நடைபெற்ற 10 ஐபிஎல் போட்டிகளின் முடிவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 150 ஆகும்.
- அதேபோல் இந்த மைதானத்தில் நடந்த 10 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் 8 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளன, 2 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன, எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தேர்வு செய்வது நல்லது.
உத்தேச அணிகள்:
டெல்லி கேபிட்டல்ஸ்:
டெல்லி அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் - கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், அக்சர் படேல், சிம்ரோன் ஹெட்மயேர், ரவிச்சந்திரன் அஸ்வின், காகிஸோ ரபாடா, அவேஷ் கான், அன்றிச் நோர்ட்ஜெ.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை அணியில் காயமடைந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ருதுராஜ் கைக்வாட், பாப் டு பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா/ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி (கேப்டன் - கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஷர்டுல் தாகூர், ட்வயன் ப்ராவோ, ஜோஷ் ஹேசல்வுட்.