AUSW v INDW : ஓங்கிய இந்தியாவின் கை, கெடுத்த மழை - ட்ராவில் முடிந்த பிங்க் டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் போராடி இழந்தது.
Team Australia and India (Photo : Cricket Australia)

பிங்க் டெஸ்ட் :

இதை அடுத்து இந்த 2 அணிகளும் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் கராரா ஓவல் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் தொடங்கியது.

  • இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஒரு பகல் இரவு இளஞ்சிவப்பு நிற பந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது, இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஸ்மிரிதி மந்தனா அபார சதம்:

இதை அடுத்து களமிறங்கிய இந்தியா ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன்கள் குவிக்க தொடங்கியது குறிப்பாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

இருப்பினும் முதல் நாளில் உணவு இடைவேளைக்குப் பின் மழையால் ஆட்டம் தடைபட்டது, தொடர்ந்து 2வது நாளில் அபாரமாக ஆடிய அவர் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட சதம் விளாசிய 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • இதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஓங்கிய இந்தியாவின் கை: 

அவருடன் தீப்தி சர்மா 66 ரன்களும், பூனம் ரௌட் 36, ஷபாலி வர்மா 31, கேப்டன் மித்தாலி ராஜ் 30 ரன்களும் எடுக்க இந்தியா தனது முதல் இன்னிங்சை 377/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா சார்பில் மோலினஸ், கேம்பல் மற்றும் எலிஸ் பெரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

திண்டாடிய ஆஸ்திரேலியா:

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 3வது நாளில் இந்தியாவின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது, ஒரு கட்டத்தில் 80/3 என பாலோ ஆனை தவிர்க்க போராடிய அந்த அணியை நட்சத்திர வீராங்கனைகள் எலிஸ் பெரி 68* ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 51 ரன்களும் எடுத்து ஓரளவு மீட்டனர்.

Team India (Photo : Getty Images)


தப்பிய ஆஸ்திரேலியா:

இதனால் பாலோ ஆனில் இருந்து தப்பிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை 241/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா, ஜூலன் கோஸ்வாமி, மேக்னா சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் பூஜா வஸ்திரக்கர் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்கள்.

இதனால் 136 என்ற மிகப்பெரிய ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழந்து மேலும் 135 ரன்களை சேர்த்து கடைசி நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 272 என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது.

இந்தியா சார்பில் 2வது இன்னிங்சில் மீண்டும் பேட்டிங்கில் கலக்கிய இளம் வீராங்கனை சபாலி வர்மா 51, ஸ்மிரிதி மந்தனா 31 ரன்களும், பூனம் ரௌட் 41* ரன்களும் எடுத்தனர்.

ட்ராவில் பிங்க் டெஸ்ட்:

இதை அடுத்து 272 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்த போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

மொத்தத்தில் இந்த போட்டியின் 4 நாட்களும் இந்தியாவின் கை தான் அதிகமாக ஓங்கி இருந்தது, இந்த 4 நாட்களிலும மழையும் குறுக்கீடு அதிகமாக இருந்தது ஒரு வேளை மழையின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா சரித்திரம் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 158 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருது வென்றார்.

இதன் வாயிலாக இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் இந்தியா 4 புள்ளிகளுடனும் உள்ளது, இதை அடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி துவங்குகிறது.

Previous Post Next Post

Your Reaction