INDW vs AUSW : சவாலான டி20 தொடரை வெல்லுமா இந்தியா - முழு விவரம்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 1 என கடைசி வரை போராடி தோற்றது. 

IndwVsAusw Meg Lanning and Harmanpreet Kaur
Meg Lanning | Harmanpreet Kaur (Photo : Cricket Australia)


ட்ராவில் பிங்க் டெஸ்ட்:

  • பின்னர் குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய மகளிர் அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

அந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி இந்தியாவை முன்னிலைப் படுத்தினார், அவருக்கு கை கொடுத்த இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இருப்பினும் அந்தப் போட்டியில் மழை பெருமளவு குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிவடையவே இந்தியாவின் வெற்றி கை நழுவி போனது.

டி20 தொடர்:

இதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோத இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 7 முதல் துவங்க உள்ளது. இந்தத் தொடரின் 3 போட்டிகளுமே ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் கராராக ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் அட்டவணை இதோ:

  • முதல் டி20, அக்டோபர் 07, மதியம் 2.10 மணி, காரரா ஓவல், குயின்ஸ்லாந்து. 
  • 2வது டி20, அக்டோபர் 09, மதியம் 1.40 மணி, காரரா ஓவல், குயின்ஸ்லாந்து. 
  • 3வது டி20, அக்டோபர் 10, மதியம் 1.40 மணி, காரரா ஓவல், குயின்ஸ்லாந்து. 

உலகின் டாப் 2 அணிகள் மோதும் இந்த தொடருக்காக இருநாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, இந்த தொடரின் முதல் போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 2.10 மணிக்கு துவங்குகிறது

நேரடி ஒளிபரப்பு:

இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

முன்னோட்டம்:

இதுவரை நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இந்த தொடர் தொடங்கிய போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

  • குறிப்பாக ஒருநாள் தொடரில் தொடர்ந்து 26 போட்டிகளில் வெற்றி பெற்ற வந்த ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை 3வது ஒருநாள் போட்டியில் வீழ்த்திய இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

அதே போன்றதொரு போராட்டத்தை இந்த டி20 தொடரிலும் இந்தியா வெளிப்படுத்தும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Photo By ICC


ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவை பொருத்தவரை வழக்கம் போல இந்த தொடரிலும் சொந்த மண்ணில் அபாரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் காயம் காரணமாக பெத் மூனி, ரீச்சேல் ஹைன்ஸ் ஆகிய வீராங்கனைகள் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவு கொடுக்கிறது.

மெக் லென்னிங், எலிஸ் பெரி, அலிசா ஹீலி போன்ற அதிரடி வீராங்கனைகள் அந்த பின்னடைவை எளிதாக சமாளிப்பார்கள் என நம்பலாம்.

பந்துவீச்சிலும் அஷ்லே கார்ட்னர், தஹிலா மெக்ராத் என அந்த அணி முழுக்க திறமையான வீராங்கனைகள் நிரம்பியுள்ளனர் என்றாலும் அவர்களின் சமீபகால பார்ம் அந்த அணி ரசிகர்களுக்கு சற்று கவலை அளிக்கிறது.

இந்தியா:

இந்திய அணியை பொறுத்தவரை ஹர்மன்பிரீத் கௌர் இந்த தொடருக்கு கேப்டன்ஷிப் செய்ய உள்ளார். இந்திய அணியிலும் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா போன்ற அதிரடி வீராங்கனைகள் உள்ளதால் வலுவாகவே காணப்படுகிறது.

யாசிக்கா பாட்டியா, ஸ்னே ராணா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரக்கர் போன்ற இளம் வீராங்கனைகளும் இந்தியாவுக்கு அணிக்கு வலு சேர்க்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலே இந்தியாவிற்கு வெற்றி தாமாகவே தேடி வரும் திறமையை இந்த வீராங்கனைகள் பெற்றுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் படுதோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்று பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

புள்ளிவிவரம்:

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • அதில் 14 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது, இந்தியா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
  • போட்டி நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் வென்றுள்ளது இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

Previous Post Next Post

Your Reaction