ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்க உள்ளது, இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை துபாயில் சந்திக்க உள்ளது.
ICC T20 World Cup | Team India (Photo : ICC/BCCI) |
இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 முன்னோட்டம் :
இந்த உலக கோப்பை நடைபெறும் அதே ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ஐபிஎல் 2021 தொடரின் 2வது பாகம் நடைபெற்று வருகிறது, டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணமாக உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று வருகிறார்கள்.
டி20 உலக உலக கோப்பையில் எந்தெந்த வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை இந்த தொடரில் வைத்தே எளிதாக கணக்கிடலாம், ஏனெனில் ஐபிஎல் 2021 தொடர் முடிந்த அடுத்த ஒரு சில நாட்களிலேயே உலக கோப்பை துபாயில் துவங்குகிறது.
வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்திய உலக கோப்பை அணியில் மாற்றங்களை செய்ய முடியும் என்ற வேலையில் ஏற்கனவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் ஐபிஎல் செயல்பாடுகளை இந்திய தேர்வு குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
பார்ம் இல்லா முக்கிய இந்திய வீரர்கள்:
இந்த வேளையில் ஐபில் 2021 தொடரின் லீக் சுற்று கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று வரும் முக்கியமான சில இந்திய வீரர்கள் பாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
1. ஹர்டிக் பாண்டியா:
இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்த இலங்கை தொடரில் கணிசமான ஓவர்களை வீசினார் ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை பந்து வீசாமல் இருப்பது இந்திய தேர்வுக் குழுவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Photo By Mumbai Indians |
2. இஷான் கிசான்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து பட்டையை கிளப்பிய காரணத்தால் இளம் இஷான் கிசான் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார்.
தற்போது நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரில் அவர் ரன்கள் குவிக்க தவறியதுடன் படுமோசமான பார்மில் உள்ளது.
இதன் காரணமாக கடந்த சில போட்டிகளாக அவர் மும்பை அணியின் ஆடும் 11 பேர் கொண்ட அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். மறுபுறம் அவரின் இடத்தில் தேர்வு செய்யப்படாத அனுபவம் வாய்ந்த ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 462 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறார்.
3. சூரியகுமார் யாதவ்:
இஷான் கிசான் போல உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவும் 2021 ஐபிஎல் தொடரில் மோசமான பார்மில் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது.
3வது இடத்தில் பேட்டிங் செய்ய சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் உலகக் கோப்பைக்கு முன் அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
4. புவனேஸ்வர் குமார்:
இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவராக விளங்கும் புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடரில் தற்போது படுமோசமான பார்மில் உள்ளார்.
- இந்த தொடரில் அவர் இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார், குறிப்பாக போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்.
5. ராகுல் சஹர்:
டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் யூஸ்வென்ற சஹால் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய ராகுல் சஹர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இருப்பினும் தற்போதைய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் பந்து வீசிய அவர் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் தேர்வு செய்யப்படாத சஹால் பெங்களூர் அணிக்காக அசத்தி வருகிறார், இதைவிட துபாய் மண்ணில் சஹாரின் பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் காணப்படுவது இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது.